உத்தரப் பிரதேசத்தின் பிரபல புகையிலை அதிபர் கே.கே.மிஸ்ராவின் மகன் ஷிவம் மிஸ்ரா, தனது ரூ.10 கோடி மதிப்புள்ள அதிநவீன 'லம்போர்கினி ரெவுல்டோ' (Lamborghini Revuelto) காரில் கான்பூர் விஐபி சாலையில் அதிவேகமாகச் சென்று கோர விபத்தை ஏற்படுத்தியுள்ளார். கட்டுப்பாட்டை இழந்த அந்த சொகுசு கார், சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மற்றும் பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் பைக்கில் வந்த தவுபிக் என்பவர் 10 அடி உயரத்திற்குத் தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைந்த நிலையில், மேலும் ஐந்து பேர் எலும்பு முறிவு மற்றும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த சமயத்தில் ஷிவம் மிஸ்ரா மதுபோதையில் இருந்ததாகவும், விபத்தை ஏற்படுத்திய பின் அங்கிருந்து தப்பிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கோடிக்கணக்கான மதிப்புள்ள அந்தக் காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி, ஷிவத்தை வெளியே இழுத்துத் தர்ம அடி கொடுக்க முயன்றனர். அப்போது பின்னால் மற்றொரு காரில் வந்த ஷிவத்தின் பாதுகாப்புப் படையினர் (Bouncers) பொதுமக்களைத் தடுத்து அவரைப் பாதுகாக்க முயன்றதால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. இறுதியில் விரைந்து வந்த போலீசார் ஷிவத்தை மீட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்த விபத்தை ஏற்படுத்திய ஷிவம் மிஸ்ராவின் தந்தை கே.கே.மிஸ்ரா ஏற்கனவே சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021-ம் ஆண்டு இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 100 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அவரது மகன் குடிபோதையில் பல கோடி ரூபாய் காரைக் கொண்டு அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடியுள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
