3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மரங்கள் சாம்பல்: 2026-தான் உலகின் மிக வெப்பமான ஆண்டா? - விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை!
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற தெற்கு அரைக்கோள நாடுகள் தற்போது வரலாறு காணாத வெப்ப அலை மற்றும் காட்டுத்தீயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு (2026) மனித வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவான ஆண்டாக மாறக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். புவி வெப்பமயமாதல் மற்றும் 'எல் நினோ' (El Nino) தாக்கத்தின் தீவிரத்தால், இந்த நாடுகள் தற்போது ஒரு 'நெருப்பு வளையத்தில்' சிக்கியிருப்பதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தொட்டுள்ளதால், காடுகள் கொழுந்து விட்டு எரிகின்றன. விக்டோரியா மாகாணத்தில் மட்டும் சுமார் 4 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. இந்தப் பயங்கரத் தீ விபத்தில் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உடல் கருகி உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மனிதனால் உருவாக்கப்பட்ட பருவநிலை மாற்றங்கள், இயற்கையான குளிர் சுழற்சியைப் பெருமளவு பாதித்துள்ளதே இந்த நிலைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தக் காட்டுத்தீயின் மிக மோசமான பாதிப்பு என்னவென்றால், அர்ஜென்டினா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான மரங்கள் தீய்க்கு இரையாகியுள்ளன. யுனெஸ்கோ (UNESCO) உலக பாரம்பரிய அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இந்தப் பழங்கால மரங்கள், பல தசாப்த கால வறட்சி மற்றும் மின்னல் தாக்குதல்களால் எரிந்து சாம்பலாகி வருகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் புவியின் மாற்றங்களைக் கண்ட இந்த அபூர்வ மரங்களின் அழிவு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எல் நினோ தாக்கம் மேலும் வலுவடைந்தால், புவியின் சராசரி வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொடக்கூடும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். "உலக நாடுகள் உடனடியாகப் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், இத்தகைய பேரழிவுகள் தற்காலிகமானவை அல்ல, மாறாக நிரந்தரமானவையாக மாறிவிடும்" என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது எரிந்து வரும் காடுகளைக் கட்டுப்படுத்தவும், எஞ்சியிருக்கும் பழமையான மரங்களைக் காக்கவும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

No comments: