லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து பெங்களூரு நோக்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 'டிரீம்லைனர்' விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு, பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் தரைஇறங்கிய இந்த விமானம், தனது அடுத்த பயணத்திற்காகத் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த ஆபத்தான கோளாறு கண்டறியப்பட்டது. விமானம் புறப்படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னதாக, அதன் முக்கிய எரிபொருள் சுவிட்ச் (Fuel Switch) தானாகவே 'இயக்க' (Run) நிலையில் இருந்து 'துண்டிப்பு' (Cutoff) நிலைக்கு மாறியுள்ளது.
விமானத்தின் எஞ்சின் செயல்பாட்டிற்கு மிக அவசியமான இந்த எரிபொருள் சுவிட்ச், விமானிகள் எவ்வித கட்டளையும் தராத நிலையில் தானாகவே மாறியது பெரும் தொழில்நுட்பக் குறைபாடாகப் பார்க்கப்படுகிறது.
ஒருவேளை விமானிகள் இந்தப் பிழையைச் சரியாகக் கவனிக்காமல் விமானத்தை ஓடுதளத்தில் வேகமெடுக்கச் செய்திருந்தால், நடுவானில் எஞ்சின்கள் செயலிழந்து ஒரு மிகப்பெரிய விபத்து நேரிட்டிருக்கக்கூடும். சரியான நேரத்தில் இந்தத் தவறு கண்டறியப்பட்டதால், நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிர் மயிரிழையில் காப்பற்றப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு அகமதாபாத்தில் நிகழ்ந்த ஒரு விமான விபத்தை நினைவுபடுத்துவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அப்போதும் இதே போன்றதொரு தொழில்நுட்பக் கோளாறே விபத்திற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது.
தற்போது போயிங் 787 டிரீம்லைனர் ரக விமானங்களில் இத்தகைய தொடர் சிக்கல்கள் எழுவது விமானப் போக்குவரத்துத் துறையில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த ஏர் இந்தியா மற்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவிட்டுள்ளது.
