சிவகங்கை நகராட்சியில் குப்பை சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளர்கள் இனி விசில்களைப் பயன்படுத்தக் கூடாது என திமுக கவுன்சிலர் பிறப்பித்துள்ள உத்தரவு, தற்போது பெரும் அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வழக்கமாகத் தூய்மைப் பணியாளர்கள் தெருக்களுக்குள் நுழையும்போது, மக்கள் தங்கள் வீட்டுப் பொருட்களைத் தயார் நிலையில் வைத்திருக்க ஏதுவாக விசில் ஊதுவது வழக்கம். ஆனால், இந்த விசில் சத்தம் பொதுமக்களுக்கும், குறிப்பாக நோயாளிகளுக்கும் கடும் இடையூறாக இருப்பதாகக் கூறி, 17-வது வார்டு திமுக கவுன்சிலர் ஜெயகாந்தன் இந்த அதிரடித் தடையை விதித்துள்ளார்.
விசிலுக்கு மாற்றாக, தூய்மைப் பணியாளர்கள் சிறிய மைக்குகள் மூலம் மென்மையான குரலில் அறிவிப்பு செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். "விசில் சத்தம் காதைப் பிளப்பதாகப் புகார்கள் வருகின்றன, அதனால் இனி மைக் மூலமே கூவி அழைக்க வேண்டும்" என அவர் பேசிய வீடியோ அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்தத் திடீர் மாற்றத்தை மக்கள் வியப்புடன் பார்த்து வரும் வேளையில், இதன் பின்னணியில் ஆழமான அரசியல் பயம் இருப்பதாக ஒரு தரப்பினர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
உண்மையில், நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) கட்சிக்குத் தேர்தல் சின்னமாக 'விசில்' வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், மக்கள் மத்தியில் 'விசில்' சத்தம் ஒலித்துக்கொண்டே இருந்தால் அது விஜய்யின் கட்சிக்குச் சாதகமாக அமைந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே திமுக இத்தகைய தடையைக் கொண்டு வந்துள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கிண்டலாகப் பேசி வருகின்றனர். "சத்தத்திற்குப் பயமா? அல்லது சின்னத்திற்குப் பயமா?" என்ற கேள்வியோடு இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
