இந்திய நீதிமன்ற வரலாற்றில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒரு சுவாரசியமான தீர்ப்பு வெளியாகியுள்ளது. கனடாவில் வசித்து வரும் இந்தியத் தம்பதியினருக்கு, மராட்டிய மாநிலம் தானே மாவட்டக் குடும்ப நல நீதிமன்றம் காணொலி காட்சி (Video Conference) வாயிலாக விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்தில் இருந்தபடியே, இணையதளம் வாயிலாக தம்பதியினர் தங்கள் திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
இந்தத் தம்பதியினருக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு மராட்டிய மாநிலத்தின் மிரா ரோட்டில் பிரம்மாண்டமாகத் திருமணம் நடைபெற்றது. இருவரும் கனடாவில் வேலை பார்த்து வந்த நிலையில், திருமணமான ஓராண்டிலேயே அவர்களுக்குள் கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2023 டிசம்பர் முதல் இருவரும் கனடாவிலேயே தனித்தனியாகப் பிரிந்து வாழத் தொடங்கினர். 31 வயது கணவரும், 24 வயது மனைவியும் பரஸ்பரம் விவாகரத்து கோரி தானே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
வேலை நிமித்தமாக இந்தியாவிற்கு நேரில் வர முடியாத சூழலில், இந்த வழக்கின் விசாரணை முழுவதும் காணொலி காட்சி மூலமாகவே நடைபெற்றது. நீதிபதி ஆர்.எஸ்.பகரே முன்னிலையில் நடந்த இந்த விசாரணையில், இருவரிடமும் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பயிற்சி பெற்ற மத்தியஸ்தர்கள் மூலமாக இவர்களைச் சேர்த்து வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இருவரும் பிரிந்து வாழ்வதிலேயே உறுதியாக இருந்தனர்.
நீதிமன்றம் வழங்கிய ஆறு மாத கால அவகாசம் முடிந்த பின்னரும், தம்பதியினர் தங்கள் முடிவில் மாற்றமில்லை எனத் தெரிவித்தனர். மேலும், எதிர்கால ஜீவனாம்சம், பராமரிப்புத் தொகை மற்றும் சொத்துப் பிரச்சனைகள் என அனைத்தையும் அவர்கள் பரஸ்பரம் பேசித் தீர்த்துக்கொண்டனர். இதனையடுத்து, இருவரின் ஒப்புதலுடன் திருமண உறவை ரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நேரில் ஆஜராகாமலேயே வெளிநாட்டில் இருந்தபடி விவாகரத்து பெற்றது சட்ட வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.
கொரோனா காலத்திற்குப் பிறகு வீடியோ காலில் திருமணங்கள் நடப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், தற்போது நீதிமன்ற நடைமுறைகளும் டிஜிட்டல் மயமாகி வருவதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது. கனடாவில் இருந்து கொண்டே இந்தியச் சட்டப்படி விவாகரத்து பெற்றுள்ளது, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்குப் பெரிய வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது. நேர விரயமும், பயணச் செலவும் இன்றி வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.
