இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான 'தசரா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தக் கூட்டணியின் வெற்றியைத் தொடர்ந்து, நானியின் 33-வது படமாக 'தி பாரடைஸ்' (The Paradise) திரைப்படம் அதே ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகி வருகிறது. எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.
முதலில் இப்படம் 2026-ஆம் ஆண்டு மார்ச் 26-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது தொழில்நுட்பக் காரணங்களால் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 'தி பாரடைஸ்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு இன்று (பிப்ரவரி 12) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படம் வெறும் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி ஆகிய இந்திய மொழிகளுடன் சேர்த்து, சர்வதேச ரசிகர்களுக்காக ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. தசரா படத்தில் ஒரு ரக்கடான (Rugged) கதாபாத்திரத்தில் நடித்த நானி, இதிலும் மிகவும் வித்தியாசமான மற்றும் மிரட்டலான தோற்றத்தில் நடித்துள்ளார். 2025-இல் வெளியான இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இப்படத்தில் மூத்த நடிகர் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுதந்திரப் போராட்டக் காலக்கட்டம் அல்லது நிலக்கரிச் சுரங்கம் சார்ந்த பின்னணியில் இந்தப் படம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அனிருத்தின் இசை மற்றும் ஸ்ரீகாந்த் ஒடேலாவின் மேக்கிங் 'தசரா'வை விடப் பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
