நார்வே முன்னாள் பிரதமர் வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை! எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கிய 'நோபல் புள்ளி'
நார்வேயின் முன்னாள் பிரதமரும், நோபல் அமைதிக் குழுவின் முன்னாள் தலைவருமான 74 வயது தோர்ப்ஜார்ன் ஜாக்லேண்டின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நார்வே போலீசார் நேற்று (பிப்ரவரி 12, 2026) அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டனர். அமெரிக்க நீதித்துறை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்களில், ஜாக்லேண்டின் பெயர் இடம்பெற்றிருந்ததைத் தொடர்ந்து இந்த ஊழல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
2011 முதல் 2018 வரையிலான காலப்பகுதியில், ஜாக்லேண்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் பாரிஸ் மற்றும் நியூயார்க்கில் உள்ள எப்ஸ்டீனின் சொகுசு குடியிருப்புகளில் பலமுறை தங்கியிருந்தது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், புளோரிடாவில் உள்ள எப்ஸ்டீனின் பண்ணை வீட்டில் அவர்கள் விடுமுறையைக் கழித்திருப்பதும், அதற்கான பயணச் செலவுகளை எப்ஸ்டீனே கவனித்துக் கொண்டதும் அம்பலமாகியுள்ளது. அமெரிக்க ஆவணங்களில் எப்ஸ்டீன் இவரை "நோபல் விஐபி" (Nobel big shot) என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜாக்லேண்ட் மீது "கடுமையான ஊழல்" (Aggravated corruption) மற்றும் "லஞ்சம் பெறுதல்" ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நார்வேயின் பொருளாதாரக் குற்றப்பிரிவு (Okokrim) வழக்குப் பதிவு செய்துள்ளது. ஜாக்லேண்ட் ஐரோப்பிய கவுன்சிலின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியதால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த ராஜதந்திரப் பாதுகாப்பு (Diplomatic immunity) இந்தச் சோதனைகளுக்காகக் கடந்த புதன்கிழமை ரத்து செய்யப்பட்டது. சோதனையின் போது ஜாக்லேண்டின் ஓஸ்லோ இல்லத்திலிருந்து பல பெட்டிகளில் ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
முன்னதாக, எப்ஸ்டீனுடனான தனது தொடர்பு சாதாரண ராஜதந்திர ரீதியானது என்று கூறிவந்த ஜாக்லேண்ட், தற்போது தனது முடிவெடுக்கும் திறனில் தவறு நேர்ந்துவிட்டதாக (Poor judgement) ஒப்புக் கொண்டுள்ளார். விசாரணையில் முழுமையாக ஒத்துழைக்கப் போவதாகவும், விரைவில் போலீசாரிடம் ஆஜராகி விளக்கம் அளிக்க விரும்புவதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதில் செல்வாக்கு மிக்க ஒரு தலைவர், ஒரு பாலியல் குற்றவாளியின் விருந்தோம்பலைப் பெற்றது நார்வே அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No comments: