‘Chucky’ பொம்மை பேய் பிடித்த மகன்: தந்தையை சம்மட்டியால் அடித்துக் கொன்று தாயை குத்திய சம்பவம் !

லண்டன்: இங்கிலாந்தின் பிரைட்டன் (Brighton) பகுதியில், ஹாரர் படங்களில் வரும் ‘சக்கி’ (Chucky) பொம்மை மீது அதீத மோகம் கொண்ட 20 வயது இளைஞன், தனது தந்தையை சம்மட்டியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டைச் சேர்ந்த இமாத் பொட்ரோஸ் (57) என்ற டெலிவரூ (Deliveroo) ஓட்டுநரே தனது மகனால் கொல்லப்பட்டவர் ஆவார். குடும்பத்துடன் எகிப்திற்குச் சுற்றுலா செல்லத் தயாராக இருந்த வேளையில், இந்த ரத்த வெறித்தாக்குதல் அரங்கேறியுள்ளது.

பாபியோ பொட்ரோஸ் (Fabio Botros) என்ற அந்த இளைஞன், சிறுவயது முதலே ‘சைல்ட்ஸ் பிளே’ (Child's Play) ஹாரர் பட வரிசையில் வரும் ‘சக்கி’ பொம்மையால் ஈர்க்கப்பட்டுள்ளான். தனது அறையிலேயே பல ‘சக்கி’ பொம்மைகளைச் சேகரித்து வைத்திருந்த அவன், மணிக்கணக்கில் அந்தப் படங்களை மட்டுமே பார்த்து வந்துள்ளான். ஆட்டிசம் மற்றும் மனநல பாதிப்பு கொண்ட பாபியோ, சம்பவத்தன்று காலை உணவின் போது திடீரென தனது தந்தையின் தலையில் சம்மட்டியால் சரமாரியாகத் தாக்கியுள்ளான். இதில் பலத்த காயமடைந்த தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தந்தையைக் கொன்ற கையோடு, பாபியோ தனது தாயார் மரியா மார்வின் மற்றும் 11 வயது சிறுவன் ஒருவனையும் கத்தியால் குத்திப் படுகாயப்படுத்தினான். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த தந்தையையும், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தாய் மற்றும் சிறுவனையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாபியோவின் சகோதரி ஜியுலியா, ஜன்னல் வழியாக "உதவி! உதவி! போலீசாரை அழையுங்கள்" என்று கத்தியபடி தப்பியது விசாரணையில் தெரியவந்தது.

லூயிஸ் கிரவுன் நீதிமன்றத்தில் (Lewes Crown Court) நடந்து வரும் இந்த வழக்கில், பாபியோ தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான். அவனது மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததால், மருந்துகள் குறைக்கப்ப்பட்டதே இந்த வன்முறைக்குக் காரணம் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. "ஒரு கற்பனைப் பொம்மையைத் நிஜம் என நம்பி, தன் குடும்பத்தையே அழிக்க முயன்ற இந்த ‘சக்கி’ ரசிகனின் செயல்" லண்டன் வாழ் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post

Contact Form