எப்ஸ்டின் விவகாரம் -ஒரு கேள்விக்குக் கூட பதிலளிக்கவில்லை மேக்ஸ்வெல் பின்னணியில் உள்ள பேரம் என்ன ?
அமெரிக்க நாடாளுமன்றத்தின் 'மேற்பார்வைக் குழு' (House Oversight Committee), ஜெப்ரி எப்ஸ்டீனின் பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் அதில் தொடர்புடைய முக்கிய நபர்கள் குறித்து விசாரிக்க கிஸ்லைன் மேக்ஸ்வெல்லைத் தொடர்பு கொண்டது. டெக்சாஸ் சிறையிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜரான மேக்ஸ்வெல், சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த விசாரணையில் ஒரு கேள்விக்குக் கூட பதிலளிக்கவில்லை. அமெரிக்க அரசியலமைப்பின் 5-வது திருத்தத்தைப் (Fifth Amendment) பயன்படுத்தி, தமக்குத் தாமே எதிராக அமையும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கப்போவதில்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
இந்த மௌனத்திற்குப் பின்னால் ஒரு பெரிய அரசியல் பேரம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேக்ஸ்வெல்லின் வழக்கறிஞர் டேவிட் மார்கஸ், "மேக்ஸ்வெல்லுக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பொதுமன்னிப்பு (Clemency) வழங்கினால், அவர் அனைத்து உண்மைகளையும் பேசத் தயார்" என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். மேலும், எப்ஸ்டீன் வழக்கில் முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இருவருக்கும் எந்தப் பங்கும் இல்லை என்றும், அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை மேக்ஸ்வெல் மட்டுமே நிரூபிக்க முடியும் என்றும் ஒரு தந்திரமான கருத்தை முன்வைத்துள்ளார்.
மேக்ஸ்வெல்லின் இந்த அணுகுமுறை நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. "மேக்ஸ்வெல் யாரைக் காப்பாற்ற முயல்கிறார்?" என்று ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக, சிறார் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மற்ற நபர்களின் பெயர்களை வெளியிடாமல் இருப்பதற்கே அவர் இத்தகைய நிபந்தனைகளை விதிக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் "ரோபோ" போல எந்த உணர்ச்சியுமின்றி கேள்விகளைத் தவிர்த்ததாக விசாரணையில் பங்கேற்றவர்கள் விவரித்துள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் தொடர்பான 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு வைக்க அனுமதித்துள்ளது. இதில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் தணிக்கை செய்யப்படாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேக்ஸ்வெல் தற்போது பேசுவதற்கு மறுத்தாலும், வரும் நாட்களில் பில் கிளிண்டன் மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதால், எப்ஸ்டீன் விவகாரம் அமெரிக்க அரசியலில் மீண்டும் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
.jpg)
No comments: