GO BACK

கிரிக்கெட்டில் பரபரப்பு! ICCயை மிரட்டும் பாகிஸ்தான்: இந்தியாவுடன் மோத 3 நிபந்தனைகள்!


ஐசிசியை மிரட்டும் பாகிஸ்தான்: இந்தியாவுடன் மோத 3 நிபந்தனைகள்! கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பு!

2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அரசு அதிரடியாக அறிவித்தது. வங்கதேச அணி பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் விளையாட மறுத்தபோது, அந்த அணியை நீக்கிவிட்டு ஸ்காட்லாந்தைச் சேர்த்த ஐசிசியின் (ICC) நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்தது. இந்நிலையில், இந்தப் போட்டியை எப்படியாவது நடத்தி முடிக்க ஐசிசி நடத்திய ரகசியப் பேச்சுவார்த்தையில், மீண்டும் விளையாடத் தயார் எனப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) 3 நிபந்தனைகளை விதித்துள்ளது.

பாகிஸ்தான் விதித்துள்ள முதல் மற்றும் முக்கிய நிபந்தனை "வருவாயில் கூடுதல் பங்கு". ஐசிசியின் ஒட்டுமொத்த வருவாயில் தற்போது பாகிஸ்தானுக்கு 5.75% மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிகள் மூலமே ஐசிசிக்கு அதிக ஒளிபரப்பு வருவாய் கிடைப்பதால், தங்களுக்கு வழங்கப்படுபடும் நிதியை கணிசமாக உயர்த்த வேண்டும் என்று பிசிபி (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி கோரியுள்ளார். நிதி நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட்டைச் சீரமைக்க இது அவசியம் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

இரண்டாவது நிபந்தனையாக, "இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடரை" (Bilateral Series) மீண்டும் தொடங்க ஐசிசி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கேட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே நேரடித் தொடர்கள் நடைபெறாத நிலையில், ஐசிசி இதில் தலையிட்டு பிசிசிஐ-க்கு (BCCI) அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். இருப்பினும், இது இரு நாட்டு அரசாங்கங்களின் முடிவு என்பதால் ஐசிசி இதில் எத்தகைய முடிவை எடுக்கும் என்பது சந்தேகமே.

மூன்றாவது நிபந்தனை ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அது "கைக்குலுக்கும் மரபைப் (Handshake Protocol) பின்பற்றுதல்". 2025 ஆசியக் கோப்பையின் போது பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. எனவே, வரும் உலகக்கோப்பை போட்டியில் விளையாட்டு வீரர்களுக்குரிய மரியாதையுடன் இந்திய வீரர்கள் கைக்குலுக்க வேண்டும் என்பதை ஒரு நிபந்தனையாகவே பாகிஸ்தான் முன்வைத்துள்ளது.

இந்த நிபந்தனைகள் குறித்து ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா லாகூரில் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். பிப்ரவரி 15 போட்டி நடைபெறவில்லை என்றால் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், ஐசிசி இதில் ஒரு நடுநிலையான முடிவை எடுக்க முயன்று வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு, இந்தப் போட்டி நடக்குமா அல்லது ரத்தாகுமா என்பது ஓரிரு நாட்களில் உறுதியாகத் தெரியவரும்.