2021-ன் முதல் இயற்கைச் சீற்றம் இனிதே ஆரம்பமானது!… பல ஆயிரம் மக்கள் பாதிப்பு… நார்வே மண்சரிவுக்கான காரணம் என்ன?!

2021-ன் முதல் பெரிய இயற்கை சீற்றம் நார்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் நிகழ்ந்திருக்கிறது. நூற்றுக்கணக்கான வீடுகள் முற்றிலும் மண்ணால் மூடப்பட்டுள்ள நிலையில் பலர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என்ற அச்சம் காரணமாக மிகத்தீவிரமாக தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நார்வேயின் வடக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆஸ்க் (Ask) கிராமத்தில் பதிவாகியுள்ளது இந்த மண்சரிவு. 2020 டிசம்பர் 30 புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஆஸ்க் கிராமவாசிகள் தங்கள் வீடுகள் நகர்வதாக போலீஸுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது.

நார்வேயில் தற்போது நிலவிவரும் பனிப்பொழிவுடன் கூடிய கடும் குளிரும், கால்களைப் புதையச்செய்யும் களிமண் நிலமும், மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் முன்னேறிச்செல்வதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. தொலைந்து போனவர்களுக்கான தேடலில் இது வரை ஏழு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து மண் சரிந்து வருவதினால் பாதுகாப்பின் பொருட்டு சுமார் 5,000 பேர் சொந்த இடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடலுக்கு தற்போது மீட்புக் குழுக்கள், மோப்ப நாய்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் டிரோன்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இன்னும் பலர் நிலத்துக்குள் கீழே குழிகளில் உயிருடன் இருப்பார்கள் என நம்பப்படுகிறது. அதனாலேயே அதிகாரிகள் தங்கள் மீட்பு பணியை முற்றாக நிறைவு செய்வதற்கு முன்னர் அனைத்து குழிகளும் scan செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

“நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய நிலச்சரிவுகளில் இது ஒன்று” என பிரதமர் எர்னா சோல்பெர்க் இதனை விவரித்துள்ளார். நிலச்சரிவு நடந்த இடத்தை நார்வே மன்னரும் ராணியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்..

Contact Us