இலங்கை கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலை கண்டிக்கிறேன் – கமல்ஹாசன்

ராமேசுவரம் அருகே கச்சத்தீவு பகுதியில் ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை ரோந்து கப்பல், அந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. மேலும் கடற்படை கப்பலை மீன்பிடி படகில் மோதவிட்டனர். இதில் படகு உடைந்து மூழ்கியது. படகில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். அவர்களில் 4 மீனவர்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.

இதற்கிடையே, 4 மீன்வர்களின் உடல்களும் இலங்கை கடற்கரையில் ஒதுங்கியுள்ளன. அவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று அடித்து கொலை செய்து கடலில் வீசி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

கப்பலை மோதவிட்டு 4 மீனவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை தூதரிடம் மத்திய அரசு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், எமது மீனவர்கள் உயிரிழக்கக் காரணமான இலங்கைக் கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலைக் கண்டிக்கிறேன். பாரம்பரிய கடல் பகுதியில் எமது மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடித் தொழில் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு செய்யவேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Contact Us