இலங்கையில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பம்

இந்திய அரசாங்கம் இலவசமாக வழங்கும் கொவிட் தடுப்பு மருந்தின் முதலாவது தொகுதி எதிர்வரும் புதன்கிழமை நாட்டிற்கு கொண்டுவரப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகும். நாட்டிற்குத் தேவையான கொவிட் மருந்துகளை விரைவாக கொண்டுவருவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அவர் கூறினார்.

´கிராமத்துடன் கலந்துரையாடல்´ நிகழ்ச்சித் திட்டத்தின் 7வது வேலைத்திட்டத்தில் நேற்று பங்கேற்ற போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

களுத்துறை, வளல்லாவிட்ட, யட்டபாத்த கிராமத்தில் இந்த திட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கடந்த நல்லாட்சி அரசாங்கம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் சம்பந்தமாக இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இரு நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்படும் உடன்படிக்கைகளை எழுந்த மாறாக கைவிட முடியாது.

கடந்த அரசாங்கம் முன்னெடுத்த எம்.சீ.சீ.உடன்படிக்கை சம்பந்தமாக தமது அரசாங்கம் அமெரிக்க அரசாங்கத்தைத் தெளிவுபடுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

உடன்படிக்கைகள் செய்து கொள்ளும் போது நாட்டின் சுயாதிபத்தியத்திற்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அவர் உறுதியளித்தார். நாட்டின் வளங்கள் வேறு நாடுகளுக்கு வழங்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார். கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தின் முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் அதன் நிர்வாகம் மற்றும் 51 வீத பங்குகளின் உரிமை இலங்கை துறைமுக அதிகார சபைக்கு உரித்தாகும். ஏனைய 49 வீத பங்குகளுக்கு முதலீடு செய்ய

இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்கள் முன்வருமென அவர் குறிப்பிட்டார்.

மக்கள் பல எதிர்பார்ப்புகளின் மத்தியில் தன்னை அதிகாரத்திற்கு கொண்டுவந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார். எதிர்வரும் நான்கு வருட காலப்பகுதியில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்தார்.

Contact Us