ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் கூகுள்; இதுதான் பிரச்சினையாம்!

செய்தி ஊடகங்களுக்கு கூகுள் நிறுவனம் பணம் செலுத்த வேண்டும் என்ற புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஆஸ்திரேலியாவிலிருந்து தாங்கள் வெளியேறுவோம் என கூகுள் அச்சுறுத்தியுள்ளது.

என்னதான் நடக்கிறது?

நீண்டகாலமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் குறித்துதான் ஆஸ்திரேலியா புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. அதாவது கூகுள் தேடலில் தோன்றும் செய்திகளுக்கோ அல்லது தங்களின் தளத்தில் பகிரப்படும் செய்திகளுக்கோ, செய்தி நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் பணம் செலுத்த வேண்டும் என்பதுதான் அந்த சட்டம்.

முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டத்தின்படி ஒவ்வொரு செய்தி நிறுவனத்துடனும் கூகுள் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை வகுக்க வேண்டும்.

“இது சட்டமாக்கப்பட்டால் கூகுள் தேடு பொறி சேவையை ஆஸ்திரேலியாவிலிருந்து நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை,” எனக் கூகுளின் பிராந்திய இயக்குநர் மெல் சில்வா தெரிவித்துள்ளார்.

மறுபக்கம் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்டாக் மாரிசன் தெரிவித்துள்ளார்.

வேறு மாற்றுகள் உண்டா?

பிற நாடுகளை போலவே ஆஸ்திரேலியாவிலும் 90 -95% சந்தை பங்கை வைத்துள்ளது கூகுள்.

ஆனால் தேடுபொறிக்கான பிற சேவைகளும் உண்டு. அவை மைக்ரோசாஃப்ட்டின் பிங், யாஹூ மற்றும் `ப்ரவசி`க்கு முக்கியத்துவம் அளிக்கும் டக்டக்கோ.

ஆனால் தளங்கள் குறித்து ஆராயும் அலேக்ஸா, இணையத்தில் கூகுள் தளம்தான் அதிகம் பயன்படுத்தப்படுவதாக கூறுகிறது. யாஹூ 11ஆவது இடத்திலும் பிங் 33ஆவது இடத்திலும் உள்ளது.

ஆஸ்திரேலியாவை விட்டு கூகுள் வெளியேறினால் மக்களைப் பாதிக்குமா?

2018ஆம் ஆண்டு வயர்டு பத்திரிகையின் எழுத்தாளர், மூன்று மாதங்களுக்கு பிங் தேடு பொறி சேவையை மட்டுமே பயன்படுத்தி சோதனை செய்து பார்த்தார். அனைத்து சமயத்திலும் அது சரியாக வேலை செய்தது என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் சில தருணங்களில் அதாவது பழைய செய்திகளை தேடுதல் போன்றவற்றில் அவருக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவர் கூகுள் தேடுதலில் பயன்படுத்திய முறை அதில் பலனளிக்கவில்லை.

மேலும் கூகுள், தேடுபொறி சேவையை மட்டும் வழங்கவில்லை. அதன் தேடுபொறி ஜிமெயில், கூகுள் மேப்ஸ் மற்றும் யூட்யூப் ஆகியவற்றுடன் இணைந்ததாக இருக்கிறது.

எனவே கூகுள் தனது தேடு பொறி சேவையை நிறுத்தினால் பிற செயலிகளையும் நிறுத்துமா என்பதை இந்த கட்டத்தில் கூற இயலாது.

இந்த செயலிகளுக்கு மாற்றாக பிற செயலிகள் இருந்தாலும், கூகுளின் செயலிகளை போல அது அதிக பயனர்களை கொண்டதாக அவை இல்லை.

அமெரிக்க கண்காணிப்பாளர்களுடன் ஏற்பட்ட சச்சரவில் கூகுள் சேவைகளை இழந்த ஹுவாவே அலைப்பேசிகளை மேற்கத்திய நாடுகளில் விற்பது கடினமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிற்கு இது முன்மாதிரியாக இருக்குமா?

ஆஸ்திரேலியாவின் செனட்டர் ரெக்ஸ் பேட்ரிக், “இது உலகமுழுவதும் நடைபெறவுள்ளது. அப்படியென்றால் நீங்கள் ஒவ்வொரு சந்தையிலிருந்தும் வெளியேறுவீர்களா.” என கூகுள் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பினார். ஆனால் கூகுள் மற்றும் பாதிக்கப்பட்ட பிற நிறுவனங்களான ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவை மையமாகக் கொண்டது. அமெரிக்காவின் முந்தைய அரசு இந்தச் சட்டம் குறித்து அவசரப்பட வேண்டாம் என ஆஸ்திரேலியாவை ஏற்கனவே எச்சரித்திருந்தது.

இதேபோன்றதொரு தருணம் இதற்கு முன்பு நடக்கவில்லை என்றாலும், உள்ளூர் சட்டத்தால் ஒரு நாட்டைவிட்டு ஏற்கனவே கூகுள் வெளியேறியுள்ளது. சீனாவில்தான் அது நடந்தேறியது.

சீனா ஹேக்கிங்கில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டுகளை கூறிய கூகுள் 2010ஆம் ஆண்டிலிருந்து சீன பெரு நிலப்பரப்பில் செயல்படுவதில்லை.

இதே போன்று வேறு ஒரு சம்பவம் ஐரோப்பாவில் நடந்து கொண்டிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்ச்சைக்குரிய `காப்பிரைட்` சட்டம், தேடு பொறி சேவை மற்றும் செய்தி சேகரித்து வழங்கும் பிற தளங்கள், செய்தி ஊடகங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கிறது.

பிரான்ஸில் இந்த வாரம் செய்தி ஊடகத்தினர் இது எவ்வாறு செயல்பட வேண்டும் எனக் கூகுளுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினர். ஆனால் இம்மாதிரியான ஒப்பந்தங்கள் குறைந்த அளவிலேயே ஏற்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவின் மூலம் கூகுளுக்கு எவ்வளவு லாபம்?

சீனாவை ஒப்பிட்டால் ஆஸ்திரேலியா ஒரு சிறிய சந்தை. 2019ஆம் ஆண்டில் கூகுள் ஆஸ்திரேலியாவில் 3.7பில்லியன் அமெரிக்க டாலர்கள் லாபமாக பெற்றது.

ஆஸ்திரேலியாவில் கூகுள் அமெரிக்கா செயல்படுமா?

ஆஸ்திரேலியாவின் கூகுள் பயனாளர்களை, கூகுள் சேவை வேறு நாட்டின் கூகுள் தேடலுக்கு இட்டுசெல்ல முடியும் ஆனால் அது உள்ளூர் தேடல் முடிவுகளை காட்டாது. இருப்பினும் சேவையை பயன்படுத்த முடியும். ஆனால் ஐபி முகவரி காட்டும் பகுதியை வைத்து கூகுளால் ஆஸ்திரேலியாவின் பயனர்களை தடுக்க முடியும்.

இல்லையேல், விபிஎன் ஆதாவது Virtual Private Network, உங்கள் கணினி வேறு ஒரு இடத்திலிருந்து பணி செய்வதுபோல அது காட்டும். இதைதான் பெரும்பாலான தொழில்நுட்பத்தில் கைத்தேர்ந்தவர்கள் பயன்படுத்துவார்கள்.

ஆனால் அந்த சேவை மெதுவாக இருக்கும்.

கூகுளிடம் எவ்வளவு பணம் கேட்கிறது ஆஸ்திரேலியா?
எவ்வளவு பணம் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.

செய்தி ஊடகங்களுடன் கூகுள் ஒரு ஒப்பந்தத்தை எட்டவில்லை என்றால், நீதிபதி ஒருவர் தலையிட்டு எது நியாயம் என முடிவு செய்வார்.

ஆனால் ஆஸ்திரேலிய அரசு ஒரு `நியாயமான தொகை` செய்தி ஊடகங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என கூறுகிறது. கடந்த 15 வருடங்களில் அச்சு ஊடகங்களில் லாபம் பெரிதும் குறைந்துவிட்டதாக ஆஸ்திரேலிய அரசு கூறுகிறது. அதே சமயம் கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களில் கொடுக்கப்படும் டிஜிட்டல் விளம்பரம் அதீத உயர்வை கண்டுள்ளது.

இது அச்சு ஊடகத்தினருக்கு பயனளிக்குமா?

பல தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களை நிர்வகிக்கும் ஊடகத்துறையின் சக்தி வாய்ந்த நபராக கருதப்படும் ரூபெர்ட் முர்டோக்கின் நியூஸ் கார்ப் நிறுவனம் ஆஸ்திரேலியாவில்தான் தோன்றியது.

இந்த சட்டத்தால் நியூஸ் கார்ப் நிறுவனம் பலன் பெறும். மற்றும் ஆஸ்திரேலியாவின் ஏபிசி நியூஸிற்கு பலன் கிடைக்கும்.

2014ஆம் ஆண்டிலிருந்து ஏபிசியின் நிதி, மில்லியன் டாலர்கள் கணக்கில் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் விளம்பரங்கள் இல்லாமல் பல உள்ளூர் செய்தித்தாள்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

Contact Us