சசிகலாவுக்கு கொரோனா குறைந்துள்ளது.. விக்டோரியா மருத்துவமனை அறிக்கை.. சர்க்கரை அளவு அதிகரிப்பு

பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு, கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக அந்த மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் சிறையிலிருந்து வரும் 27ம் தேதி ரிலீசாக இருந்தார் சசிகலா. ஆனால் உடல்நிலை பாதிப்பு காரணமாக அவர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து அதற்குரிய மருந்துகளும், மூச்சுத்திணறலுக்கு ஆக்சிஜன் மூலமாக வழங்கப்படும் சிகிச்சையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தினந்தோறும் சசிகலா உடல்நிலை பற்றி பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. இன்று காலை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: சசிகலாவின் கொரோனா நோய் தொற்று குறைந்து வருகிறது. ரத்த அழுத்தம் 130க்கு 80 என்ற அளவில் நார்மலாக இருக்கிறது. நாடித் துடிப்பு, 74 என்ற அளவுக்கு இருக்கிறது. இதுவும் நார்மல் தான். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 98 சதவீதம் என்ற அளவுக்கு இருக்கிறது. 3 லிட்டர் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவு 205 என்ற அளவுக்கு இருக்கிறது. இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது.

சசிகலா உடல்நிலை சீராக இருக்கிறது. நன்றாக உணர்கிறார். தனது சாப்பாட்டை அவரே சாப்பிடுகிறார். நல்லபடியாக உட்கார முடிகிறது. உதவியுடன் நடக்கிறார். வழிகாட்டு நெறிமுறைப்படி அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று சசிகலா உடலில் சர்க்கரை அளவு 157 ஆக இருந்தது. இன்று அது 205 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. எனவே இன்சுலின் மூலம், சிகிச்சை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

Contact Us