மதுரை மாவட்டத்தில் வளர்ப்பு தந்தையால் பாலியல் வல்லுறவு: கருவுற்ற சிறுமிக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு!

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே 13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து, கர்ப்பமாக்கிய வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி, சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை ஆகியோருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் ஜனவரி 25 அன்று பதிவுசெய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், வளர்ப்பு தந்தை மீது பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் (போக்சோ) மூன்று வெவ்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வன்னிவேலம்பட்டியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ள நபர். இவர் கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்பு கேரளாவில் வேலை பார்த்தபோது அங்கு இவர் தங்கியிருந்த வீட்டின் அருகே வசித்து வந்த சிறுமியின் தாயுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் அவரது கணவர் இறந்துவிட்டதால் அவர் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்ததார். பின்னர் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபரின் ஆதரவு கிடைத்தது இவருடன் வன்னிவேலம்பட்டியில் சேர்ந்து வாழத் தொடங்கினார். இந்த நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு அப்பெண்ணின் இளைய மகளின் உடல் நலம் சரியில்லாமல் போனது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது அவர் நான்கு மாதம் கருவுற்று இருப்பது தெரியவந்தது.

தனது மகளிடம் கர்ப்பத்திற்கு காரணம் யார் என பல முறை கேட்டார் சிறுமியின் தாய். சிறுமி சிறிது தயக்கத்துடன் தனது கர்ப்பத்துக்கு காரணம் தனது வளர்ப்புத் தந்தையே என கூறியதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த அவரது வளர்ப்பு தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறுமி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்யப்பட்டதில், சிறுமியின் ரத்தத்தில் ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிறுமியின் தாய் மற்றும் கைதாகியுள்ள வளர்ப்பு தந்தைஆகியோரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்தபோது அவர்கள் இருவருக்கும் எய்ட்ஸ் நோய் இருப்பது தெரியவந்ததுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.

இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சிறுமிக்கு தற்பொழுது தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

சிகிச்சை முடிந்தபின் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு சிறுமியை அரசு காப்பகத்தில் சேர்த்துக் கண்காணிப்பது குறித்த முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். (பாலியல் வல்லுறவுக்கு உள்ளானவர் மற்றும் எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் என்பதால் தொடர்புடையவர்களின் பெயர், படங்களை பிபிசி தமிழ் வெளியிடவில்லை.)

Contact Us