அமெரிக்காவில் பெண் டாக்டரை சுட்டுக்கொன்று விட்டு இந்திய டாக்டர் தற்கொலை

அமெரிக்க நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரமான ஆஸ்டின் நகரில், குழந்தைகள் நல ஆஸ்பத்திரி ஒன்று செயல்பட்டு வருகிறது.

அந்த ஆஸ்பத்திரிக்குள் கடந்த 26-ந் தேதி ஒருவர் கைத்துப்பாக்கியுடன் சென்று, அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக போலீசுக்கு புகார் சென்றது. அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

ஆனால் அதற்குள் பிணைக்கைதிகளில் பலர் அங்கிருந்து தப்பிவிட்டனர். எஞ்சியவர்களில் குழந்தைகள் நல மருத்துவரான பெண் டாக்டர் கேதரின் டாட்சன் என்பவரை தவிர மற்றவர்கள் தப்பிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு விட்டனர்.

அத்துடன் துப்பாக்கி வைத்திருந்த நபர், டாக்டர் கேதரின் டாட்சனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிர் துறந்தார். போலீசார் அங்கு வந்தபோது அவர்கள் இருவரையும் பிணங்களாகத்தான் பார்க்க முடிந்தது.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், துப்பாக்கியால் சுட்டு பெண் டாக்டரை சுட்டுக் கொன்று விட்டு, தானும்சுட்டு தற்கொலை செய்து கொண்ட நபர் குழந்தைகள் நல மருத்துவர் என்றும், அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பரத் நெடுமாஞ்சி (வயது 43) என்றும் தெரிய வந்தது.

பரத் நெடுமாஞ்சி, முற்றிய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார், கடந்த வாரம் இதே ஆஸ்பத்திரிக்கு வந்து, தன்னார்வலராக சேருவதற்கு விண்ணப்பித்து இருந்தார், ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

அவருக்கும் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் டாக்டர் கேதரின் டாட்சனுக்கும் என்ன தொடர்பு, எதற்காக அவரை சுட்டுக் கொன்று விட்டு, பரத் நெடுமாஞ்சி தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

இந்த சம்பவம், ஆஸ்டின் நகரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

Contact Us