‘9 நாள் லீவ் கேட்ட எம்.பி’.. இதுல ரெண்டு பேருக்குமே ‘சம பங்கு’ வேணும்.. அனைவரது மனசையும் கவர்ந்த காரணம்..!

தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இருந்து விடுப்பு வேண்டி விண்ணபித்த காரணம் அனைவரது மனதையும் கவர்ந்து வருகிறது.

தெலுங்கு தேசம் கட்சியின் ஸ்ரீகாகுளம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராம் மோகன் நாயுடு (33). இவர் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலிருந்து 9 நாட்கள் விடுப்பு வேண்டி மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை வைத்துள்ளார். விடுப்புக்காக அவர் வைத்த காரணம்தான் தற்போது கவனம் பெற்று வருகிறது. கர்ப்பமாக உள்ள மனைவியின் பிரசவத்தின்போது தான் அருகில் இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

அதில், ‘பிள்ளை பேற்றில் இருவருக்கும் பங்கிருக்கிறது. குழந்தையை பார்த்துக் கொள்வதிலும் சம பங்கு வேண்டும் என்ற நோக்கில் இந்த விடுப்பை எடுத்துள்ளேன். ஜனவரி 29 முதல் பிப்ரவரி 10 வரை விடுப்பு கேட்டுள்ளேன். இதை நான் சொல்ல காரணம் உள்ளது. அவையில் நல்ல வருகை பதிவு கொண்டவன் நான். அதனால் எனது விடுப்புக்கான காரணம் பதிவில் இருப்பது நல்லது என நினைத்ததால் இதை செய்துள்ளேன்’ என நாடாளுமன்ற உறுப்பினர் ராம் மோகன் நாயுடு கூறியுள்ளார்.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் தனது மனைவியின் பிரசவத்துக்காக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விடுப்பு எடுத்துச் சென்றார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினரும் அதேபோல் விடுப்பு வேண்டியுள்ளது, இந்தியாவில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Contact Us