ஈரானின் பிரச்சனை அபாய கட்டத்தில் உள்ளது; சீனா!

அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் அரசு ஒப்புக் கொண்டது. அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்தார். மேலும், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தினார். இதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ஜோ பைடன், ஈரான் அரசு அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுவதாக ஒப்புக்கொண்டால் அணுசக்தி ஒப்பத்தத்தில் மீண்டும் அமெரிக்கா இணையும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் ஈரானின் அணுசக்தி பிரச்சனையின் தற்போதைய நிலைமை அபாய கட்டத்தில் உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. மேலும் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா திரும்புவதும், ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை நீக்குவதும் இந்த பிரச்சினைக்கான முட்டுக்கட்டைகளை உடைப்பதற்கான திறவுகோல்கள் என்று சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.