இப்படிதான் ATM-ல ஸ்கிம்மரை ஃபிக்ஸ் பண்ணுவாங்களா..!’ போலீஸ் முன் செய்து காண்பித்த கொள்ளையர்கள்.. பரபரக்க வைத்த வீடியோ..!

ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவியை பொருத்திப் பணத்தை கொள்ளையடித்து வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கேரளாவைச் சேர்ந்த கிளாட்வின் ஜிண்டோ ஜாய் (37), அப்துல் மஜித் (27), ராகுல் (24) மற்றும் டெல்லியைச் சேர்ந்த தினேஷ் சிங் ராவத் ஆகிய நான்கு பேரும் நாடு முழுவதும் பல ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் (Skimming device) கருவியை பொருத்தி பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்துக்கு ஜிண்டோ ஜாய் தான் மூளையாக செயல்பட்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பி.காம் படிப்பை பாதியில் கைவிட்ட ஜிண்டோ ஜாய், ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி கொள்ளையடிப்பதற்காக இந்த 3 பேர் கொண்ட டீமை உருவாக்கியுள்ளார். இவர்கள் மாதச் சம்பளம் வாங்குவோர், பென்சன் பணம் பெறுவோரின் வங்கிக் கணக்கை குறிவைத்து கொள்ளையடித்து வந்துள்ளனர். இதற்காக போலியாக பல ஏடிஎம் கார்டை தயாரித்துள்ளனர்.

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கப்போவதுபோல் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி வந்துள்ளனர். பின்னர், குறிப்பிட்ட வங்கக் கணக்குகளை நோட்டமிடும் இந்த கும்பல், அவர்களது வங்கிக் கணக்கில் பணம் ஏறியதும், உடனே போலி ஏடிஎம் இயந்திரம் மூலம் அந்த பணத்தை எடுத்து வந்துள்ளனர். இப்படி பணத்தை எடுக்க முடியவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நபர்கள் ஏடிஎம் இயந்திரத்துக்கு பணம் எடுக்க வரும்போது மிரட்டி பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் மங்களூரில் உள்ள மங்களாதேவி கோயில் அருகேவுள்ள ஏடிஎம் இயந்திரத்தில் இந்த கும்பல் ஸ்கிம்மர் கருவியை பொருத்த சென்றுள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவியை பொருத்த முயன்ற 4 பேரையும் மடக்கி பிடித்தனர்.

இதனை அடுத்து அவர்களிடமிருந்த இரண்டு கார்கள், பல போலியான ஏடிஎம் கார்டுகள், 5 செல்போன்கள் மற்றும் 2 ஆப்பிள் கைக்கடிகாரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவியை எப்படி பொருத்தினோம் என போலீசாரிடம் அந்த கும்பல் செய்து காண்பித்தது. இந்த நிலையில் 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.