கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை; பதற வைக்கும் பின்னணி!

பெலகாவி அருகே வாலிபர் கொலையில் மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.

வனப்பகுதியில் பிணம்

பெலகாவி அருகே சோமனகட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் சாகர் பூஜாரி (வயது 30). இவருக்கும் நிங்கவ்வா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து இருந்தது. இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி வேலைக்கு சென்ற சாகர் திடீரென மாயமானார்.

அவர் மாயமாகிவிட்டதாக குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாகரை தேடிவந்தனர். இந்த நிலையில் சோமனகட்டி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் சாகர் பிணமாக மீட்கப்பட்டார். அவரை யாரோ கொலை செய்து உடலை வனப்பகுதியில் வீசியது தெரியவந்தது. இதுகுறித்து மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.

4 பேர் கைது

இந்த நிலையில் சந்தேகத்தின்பேரில் நிங்கவ்வாவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதல் விவகாரத்தில் சாகர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதற்கு நிங்கவ்வாவும் உடந்தையாக இருந்தது தெரிந்தது. இதனால் அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் சோமனகட்டி கிராமத்தை சேர்ந்த பாலப்பா, அவரது நண்பர்கள் பசவராஜ், மஞ்சுநாத் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

கள்ளக்காதலுக்கு இடையூறு

அதாவது கைதான பாலப்பா, நிங்கவ்வாவின் அக்காள் கணவர் ஆவார். மனைவியின் தங்கை என்பதால் நிங்கவ்வாவிடம் பாலப்பா நெருங்கி பழகி வந்து உள்ளார். இந்த பழக்கம் 2 பேருக்கும் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்து உள்ளனர்.

இதற்கிடையே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சாகருக்கும், நிங்கவ்வாவுக்கும் திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்திற்கு பின்னரும் நிங்கவ்வாவும், பாலப்பாவும் உல்லாசமாக இருந்து வந்து உள்ளனர். இதுபற்றி அறிந்த சாகர், நிங்கவ்வாவை கண்டித்து உள்ளார். மேலும் பாலப்பாவுடனான கள்ளக்காதலை கைவிடும்படியும் அவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்து உள்ளார்.

கழுத்தை நெரித்துக்கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த நிங்கவ்வா கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் சாகரை தீர்த்துக்கட்ட பாலப்பாவிடம் கூறி உள்ளார். அதன்படி கடந்த 13-ந் தேதி சாகரை வனப்பகுதிக்கு அழைத்து சென்ற பாலப்பா, அவரது நண்பர்கள் பசவராஜ், மஞ்சுநாத் அகியோர் அங்கு வைத்து சாகரை கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. கைதான 4 பேர் மீதும் மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.