சீட்டுக்கு அடியில் இருந்த பை’!.. ரகசிய தகவலால் ரயிலில் நடந்த அதிரடி சோதனை.. பொலிசாரை அதிரவைத்த பெண்..!

ரயிலில் வெடிபொருட்களை எடுத்துச் சென்ற பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு கர்நாடக மாநிலம் மங்களூரு நோக்கி மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இன்று காலை கேரள மாநிலம் பாலக்காடு ரயில் நிலையத்தைக் கடந்து ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் வெடிபொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக பாலக்காடு ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து கோழிக்கோடு ரயில் நிலையம் வந்தடைந்த மங்களளூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது D1 பெட்டியின், ஒரு இருக்கைக்கு அடியில் பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 117 ஜெலெட்டின் குச்சிகள், 350 டெட்டனேட்டர்ஸ் வெடிபொருட்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், ரயிலில் இந்த வெடிபொருட்களை கொண்டு சென்றது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ரமணி என்ற பெண் என்பது தெரியவந்தது. அவர் காட்பாடியில் இருந்து தலசேரிக்கு இதனைக் கொண்டு சென்றுள்ளார். தலசேரியில் கிணறு தோண்டுவதற்காக ஜெலெட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டஸை எடுத்து சென்றதாக ரமணி போலீசாரிடம் தெரிவித்தார். இந்த நிலையில் அப்பெண்ணிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.