முகேஷ் அம்பானி வீட்டின் அருகே நின்ற மர்ம ‘பச்சை’ கலர் கார்.. ‘உள்ளே என்ன இருக்குன்னு பாருங்க’..

தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே பச்சை கலர் மர்ம கார் நீண்ட நேரமாக நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் கார்மைக்கேல் ரோடு பகுதியில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு அமைந்துள்ளது . ரிலையன்ஸ் நிறுவனங்களில் தலைவரும், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான அம்பானியின் வீட்டை சுற்றி எப்போதும் பாதுகாவலர்கள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருப்பது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று மாலை, பச்சை கலர் ஸ்கார்ப்பியோ கார் ஒன்று கேட்பாரின்றி முகேஷ் அம்பானி வீட்டுக்கு வெளியே நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. இது சந்தேகத்தை ஏற்படுத்தியதால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், காரை சோதனையிட்டனர். அப்போது காரின் உள்ளே வெடிபொருட்கள் இருப்பதுபோல தெரிந்ததால், உடனே வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இதனை அடுத்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் காரை முழுமையாக பரிசோதனை செய்தனர். அப்போது காரின் உள்ளே ஜெலட்டின் குச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த கார் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது.

கார் நம்பர் பிளேட் பற்றி போலீசார் ஆய்வு செய்தபோது, அது ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஜாகுவார் வகை சொகுசு கார் நம்பர் பிளேட் என்பது தெரியவந்தது. மேலும் சில போலி நம்பர் பிளேட்டுகள் காருக்குள்ளே இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தெரிவித்த போலீசார், ‘வெடிபொருளான ஜெலட்டின் குச்சிகள் பச்சை கலர் காரில் இருந்தது. அந்த கார் நம்பர் பிளேட் அம்பானிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருபவர்களின் ஒருவரது காரின் நம்பர் பிளேட் என்பது தெரியவந்துள்ளது. அந்த காரில் ஜெலட்டின் குச்சிகளுடன் கடிதமும் கிடைத்துள்ளது’ என தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் அந்த மர்ம கார் நிறுத்தப்படுவது பாதிவாகியுள்ளது. அதிகாலை சுமார் 1 மணியளவில் கார் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த காருக்கு பின்னால் ஒரு வெள்ளை கலர் கார் செல்கிறது. அந்த காரில் உள்ளவர்கள் யார்? அதை ஓட்டியவர் யார்? என விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே ஜெலட்டின் குச்சிகள் இருந்த மர்ம கார் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.