சிங்கப்பூரில் பணிப்பெண்ணை கொடூர சித்திரவதை செய்து கொன்ற தமிழ்ப் பெண் காயத்திரி!

சிங்கப்பூரில் பணிப்பெண்ணை சித்திரவதை செய்து கொலை செய்த தமிழ் வம்சாவளி பெண்,தனது குற்றங்களை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். அவரது தண்டனை விபரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. பொலிஸ் அதிகாரியின் மனைவியான அவரும், குடும்பத்தினரும் செய்த சித்திரவதைகள் பற்றிய தகவல்கள் வெளியாகி சிங்கப்பூரையே உறைய வைத்துள்ளது.உடல் மெலிந்து சிறுத்துப்போன பணிபெண்ணை ஒரு பொம்மையைப் போல தலை முடியைப் பிடித்து தூக்கி குலுக்கியதைக் காட்டும் காணொளி ஒன்று, கடந்த 23ஆம் திகதி நடந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் காட்டப்பட்டது.

காண்போரின் நெஞ்சை உறைய வைக்கக்கூடியதாக அது இருந்தது. கடந்த 2016 ஜூலை 26ஆம் திகதி இறந்துபோன மியான்மரை சேர்ந்த பணிப்பெண் பியாங்கிற்கு அப்போது வயது 24. கடந்த 2015 மே 28ஆம் திகதி பணிக்குச் சேர்ந்தபோது 38 கிலோவாக இருந்த அவரது உடல் எடை, உயிரிழந்த நாளில் 24 கிலோவாகக் குறைந்துவிட்டது. அவரைப் பட்டினி போட்டு, கொடுமைப்படுத்தி, இறுதியில் உயிரிழக்கச் செய்ததை அவரது முதலாளி 40 வயது காயத்ரி முருகையனும் அவரது கணவர் 41 வயது கெல்வின் செல்வமும் ஒப்புக்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, போலிஸ் அதிகாரியான செல்வம் 2016 ஓகஸ்ட் 8ஆம் திகதியிலிருந்து தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். காயத்ரி, அவரின் தாயார், செல்வம் ஆகியோர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் நீதிமன்றங்களில் இன்னும் இடம்பெற்று வருகின்றன. நோக்கமில்லா மரணம் விளைவித்தது உட்பட 28 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட காயத்திரிக்கு ஆயுள் தண்டன விதிக்கும்படி அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கோருகின்றனர்.

பியாங் இங்கை டொன் எனும் அந்த பணிப்பெண் கிட்டத்தட்ட 10 மாதங்களாக, பெரும்பாலும் தினமும் உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டார். போதிய உணவோ, ஓய்வோ கொடுக்கப்படாத நிலையில் அந்தப் பணிப்பெண் குளிக்கும்போதும், கழிவறையைப் பயன்படுத்தும்போதும் குளியலறை மற்றும் கழிவறைக் கதவுகளைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என பணிக்கப்பட்டார்.

அந்தப் பணிப்பெண், தன்னுடைய இறுதி 12 நாட்கள் சன்னல் கம்பியில் கட்டி வைக்கப்பட்டதுடன் தரையில் உறங்கினார். கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் திகதி அந்தப் பணிப்பெண் இறந்தபோது அவரது உடல் எடை 24 கிலோ மட்டுமே.