பெற்றோர் கண்டித்ததால் கற்பழிப்பு நாடகமாடிய மாணவி!

சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டித்ததை தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவி கற்பழிப்பு நாடகமாடினார். அவருக்கு நடத்திய மருத்துவ பரிசோதனை அறிக்கையில் இந்த குட்டு அம்பலமானது.

எஸ்.எஸ்.எல்.சி. மாணவி

உத்தரகன்னடா மாவட்டம் எல்லாப்புரா தாலுகா நந்தோள்ளி கிராமத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வரும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவி சரிவர வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இதனால் தலைமை ஆசிரியர் மாணவியை கண்டித்துள்ளார். இருப்பினும் மாணவி தினமும் வீட்டுப்பாடம் எழுதாமல் பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

இதனால் அதிருப்தி அடைந்த தலைமை ஆசிரியர், மாணவியின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து, மாணவி பற்றி புகார் கூறினர். எஸ்.எஸ்.எல்.சி. படித்து வரும் உங்கள் மகள் சரிவர படிப்பதில்லை. வீட்டு பாடங்களை சரிவர செய்வதில்லை. இப்படியே இருந்தால் அவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி அடைவார் எனக் கூறி, அவருக்கு அறிவுரை வழங்கும்படி கூறினார்.

கற்பழித்ததாக புகார்

இதைதொடர்ந்து வீட்டுக்கு வந்த மாணவியை, பெற்றோர் கண்டித்துள்ளனர். மேலும் பாடத்தில் கவனம் செலுத்தும்படி அறிவுரை கூறினர். இதனால் ஆத்திரமடைந்த மாணவி பெற்றோரை பழிவாங்க திட்டமிட்டார்.

அதன்படி அவர் தனது வீட்டு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்று சிறிது நேரம் தங்கியிருந்தார். வீட்டில் மகளை காணாத பெற்றோர் அவரை தேடினர். இதற்கிடையே அழுதபடி வீட்டுக்கு வந்த மாணவி, தன்னை சிலர் கற்பழித்து விட்டதாக கூறினார்.

பெற்றோர் கண்டித்ததால்…

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சம்பவம் பற்றி எல்லாப்புரா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மாணவியை போலீசார் எல்லாப்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது மாணவி கற்பழிக்கப்படவில்லை என்று தெரியவந்தது.

இதனால் மாணவியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது தான், சரியாக படிக்காமலும், வீட்டு பாடம் செய்யாமலும் மாணவி இருந்து வந்ததும், இதனால் தலைமை ஆசிரியர், பெற்றோர் கண்டித்ததால் மாணவி கற்பழிப்பு நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து மாணவிக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.