வெற்றி பெறுபவர்களுக்கு ஆடு, மதுபானம் என நூதன பரிசுகளுடன் கிரிக்கெட் போட்டி? எங்கு தெரியுமா?

ஹாசனில் நூதன பரிசுகளுடன் கிரிக்கெட் போட்டி வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. அதாவது வெற்றி பெறும் அணிக்கு ஆடு, மதுபானம் பரிசாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கிரிக்கெட் போட்டி

உலக அளவில் கிரிக்கெட் பிரபலம் என்றாலும், இந்தியாவில் தான் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம். அதனால் தான் என்னவொ பட்டி தொட்டி எல்லாம் கிரிக்கெட் விளையாடுபவர்கள் அதிகளவில் உள்ளனர். இளைஞர்களை கவரும் வகையில் கிராமிய கிரிக்கெட் போட்டிகள் பல்வேறு வடிவில் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் பரபரப்புக்கும், சுவாரசியத்துக்கும் பஞ்சமிருக்காது. அதுபோல் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா அலதஹள்ளி கிராமத்தில் சிவராத்திரி கிரிக்கெட் கிளப் சார்பில் வருகிற மார்ச் 10-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை 3 நாட்கள் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இந்த கிரிக்கெட் போட்டி அறிவிப்பு தான் தற்போது இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஆடு, மதுபானம் பரிசு

இந்த கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசை பெறும் அணிக்கு ஒரு ஜோடி கிடாவும், 2 புல்பாட்டில் விஸ்கி, 2-வது பரிசாக ஒரு கிடா,
1 புல் பாட்டில் விஸ்கி, 3-வது பரிசு ஒரு கிடா, 1 புல் பாட்டில் விஸ்கி ஆகியவையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிக்கு பரிசு கோப்பையும் வழங்கப்படுகிறது. மேலும் ஆறுதல் பரிசாக 3 நாட்டு கோழிகளும் வழங்கப்படுகிறது. இந்த கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ள அணிகள் நுழைவு கட்டணமாக ரூ.1,200 செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஆடு, மது பரிசு வழங்குவதாக சிக்கமகளூரு மாவட்டம் கடபகெரே கிராத்தில் நடத்தப்படுவதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட அதிக அணிகள் முன்பதிவு செய்தன. இதனால் போட்டியை நடத்த முடியாமல் அந்த போட்டி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.