‘மக்களே உஷார்’… ‘கல்யாண செலவு, நகை வாங்க காசு கொண்டு போறீங்களா’?…

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சத்ய பிரதா சாகு , தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால்,பறக்கும் படை சோதனைகளைத் தொடங்க அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்படப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 88,963 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட இருப்பதாகக் கூறியுள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி, இதில் 6000 முதல் 7000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என முதல்கட்டமாகக் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்

இருப்பினும் போட்டியிடும் வேட்பாளர்களைப் பொறுத்து இதன் எண்ணிக்கை மாறும் என்றும் குறிப்பிட்டார். 45 கம்பெனி துணை ராணுவப்படை முதல் கட்டமாகத் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேவைப்பட்டால் கூடுதல் துணை ராணுவப்படையினர் தமிழகம் வருவார்கள் என கூறியுள்ளார்.

இதற்கிடையே மக்களவை தேர்தலின் போது ஆவணங்கள் இல்லாமல் 50,000 ரூபாய் வரை ரொக்கப்பணம் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது. தற்போது தமிழகச் சட்டமன்ற தேர்தலிலும் அதே நிலை தொடரும் என கூறியுள்ள சத்ய பிரதா சாகு, அதே நேரத்தில் உரிய ஆவணங்களுடன் கூடுதல் பணத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பொதுமக்கள் 50,000 ரூபாய்க்கு மேலே எடுத்துச் செல்லும் பட்சத்தில் அதற்குரிய முறையான ஆவணங்களை நிச்சயம் கையில் வைத்திருக்க வேண்டும் எனக் கூறியுள்ள சத்ய பிரதா சாகு, சோதனையின் போது முறையான ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் அந்த பணம் பறிமுதல் செய்யப்படும் என கூறியுள்ளார்.

மேலும் தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம், இதன் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.