18 மணி நேரத்தில் 25 கி.மீ. சாலை.. என்னனென்று போட்டார்களோ; ஓடிப்போய் பதிந்த லிம்கா?

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டத்தில் இருந்து மராட்டிய மாநிலம் சோலாப்பூருக்கு 110 கிலோ மீட்டருக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 4 வழிச்சாலை அமைக்கும் பணியில் விஜயாப்புராவில் இருந்து 25.54 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலையை 18 மணிநேரத்தில் அமைத்து தொழிலாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இந்த சாலை அமைக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம், 25 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலையை 18 மணிநேரத்தில் அமைத்து முடிக்க 500 தொழிலாளர்களை பயன்படுத்தி இருந்தது. இந்த சாதனை, ‘லிம்கா’ புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து, லிம்கா புத்தகத்தில் இடம் பிடித்துள்ள இந்த சாதனையை மத்திய மந்திரி நிதிக் கட்கரி பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய மந்திரி நிதின் கட்கரி தனது டுவிட்டர் பதிவில், “விஜயாப்புரா-சோலாப்பூர் இடையிலான 4 வழிச்சாலை அமைக்கும் பணியில் 25.54 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையை 18 மணிநேரத்தில் அமைத்து சாதனை படைத்த தொழிலாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். விஜயாப்புராவில் இருந்து சோலாப்பூருக்கு 110 கிலோ மீட்டர் தூரம் வரை அமைய உள்ள நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம் இந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதத்திற்குள் நிறைவு பெறும்” என்று கூறியுள்ளார்.