ராக்கெட் வெற்றிகரமாக பறக்க வேண்டி திருப்பதி கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன்; கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடுமா?

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட், 19 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி 30 நிமிடம் கொண்ட ‘கவுன்ட் டவுன்’ நேற்று காலை 8:54 மணிக்கு துவங்கியது.

இந்த ராக்கெட் மூலம் பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 செயற்கைக் கோள், இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் சாட், சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜிஎச் ரைசோனி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் ஆகிய 5 செயற்கைக்கோள்கள் மற்றும் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்கள் என மொத்தம் 19 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்ட்தப்பட்ட உள்ளன.

இந்நிலையில் இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறக்க வேண்டி இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர், ராக்கெட்டின் மாதிரி வடிவம், ஆவணங்கள், வரைபடம் ஆகியவற்றை மூலவர் பாதத்தில் வைத்து வழிபட்டார்.

கோவிலில் இருந்து வெளியே வந்ததும், இஸ்ரோ தலைவர் சிவன் நிருபர்களிடம் கூறுகையில், இஸ்ரோ தலைவராக இருப்பது பாக்கியம். மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. அதேபோல் இந்த ஆண்டு பல செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளோம். முதல் முறையாக வணிக ரீதியான ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படுகின்றன என்றார்.