உல்லாசமாக இருந்ததை பார்த்துவிட்டதால் பழ வியாபாரியை கொலை செய்த மனைவி; சாக்குமூட்டையில் கட்டி உடலை கிணற்றில் வீசிய கொடூரம்!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கீரனூரை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 35). இவருடைய மனைவி தேவி (34). தேவியின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள வடதாரை காமராஜர்புரமாகும். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தண்டபாணியும், அவருடைய மனைவியும் தாராபுரம் போலீஸ் நிலையம் அருகே தள்ளுவண்டியில் பழவியாபாரம் செய்து வந்தனர். தினமும் பழவியாபாரம் முடிந்ததும் இரவு நேரத்தில் தம்பதி இருவரும் மொபட்டில் கீரனூர் சென்று விடுவர். ஒரு சில நாட்கள் தண்டபாணி மட்டும் கீரனூர் செல்வார்.

அப்போது தேவி மட்டும் தனது தாயாரின் வீடான வடதாரை காமராஜர்புரத்தில் தங்கிக்கொள்வார்.

இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி இரவு தேவி மட்டும் கீரனூர் சென்றுள்ளார். மறுநாள் பழவியாபாரம் செய்ய தாராபுரத்திற்கு தேவி வராமல் 16-ந் தேதி வரை கீரனூரில் தங்கிக்கொண்டார். இதனால் தண்டபாணியின் உறவினர்கள் தேவியிடம் பழ வியாபாரத்திற்கு தாராபுரம் போகவில்லையா? என்று கேட்டுள்ளனர். அப்போது தேவி, “தனது கணவர் தண்டபாணி வெளியூர் சென்று விட்டதால் அவர் வந்தவுடன் வியாபாரத்திற்கு போக வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அன்றைய தினமே தனது கணவர் தண்டபாணியை கடந்த 14-ந் தேதி முதல் காணவில்லை என்றும், கண்டுபிடித்து தரவேண்டும் என்றும் கீரனூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டபாணியை தேடினர். மேலும் கணவரை காணவில்லை என்று தேவி திடீரென்று புகார் செய்ய காரணம் என்ன? என்று சந்தேகத்தின் பேரில் தேவியிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் தேவியின் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததாக தேவி அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அதன் விவரம் வருமாறு:-

தேவிக்கு அவரது தாயாரின் வீட்டின் அருகில் வசித்து வரும் உறவினரான பெயிண்டர் அபிஷேக் (19) என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இது தண்டபாணிக்கு தெரியவந்தது. அவர் தேவியை கண்டித்தார்.

இந்த நிலையில், தேவி கடந்த 14-ந் தேதி இரவு 11 மணிக்கு அபிஷேக்கை கீரனூர் வரவழைத்து அவருடன் உல்லாசமாக இருந்து உள்ளார். அப்போது தண்டபாணி அங்கு வந்து இருவரையும் பார்த்து விட்டார். இதனால் பதறி போன கள்ளக்காதலர்கள் இருவரும் சேர்ந்து பிளாஸ்டிக் பையால் தண்டபாணியின் முகத்தை மூடி, கையை கட்டி இரும்பு கம்பியால் கொடூரமாக அடித்து கொலை செய்தனர். பின்னர் உடலை சாக்குமூட்டையில் கட்டி தாராபுரம்-ஒட்டன்சத்திரம் சாலை பழனி பிரிவு அமராவதி ஆற்றின் ஓரம் உள்ள ஒரு கிணற்றில் சாக்குமூட்டையுடன் கல்லையும் சேர்த்து கட்டினர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தேவியை கைது செய்தனர். கிணற்றில் வீசப்பட்ட தண்டபாணியின் உடலையும் போலீசார் கைப்பற்றினர். தேவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அபிஷேக்கையும் போலீசார் கைது செய்தனர்.