இலங்கையில் ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தல்; ஐ.நா-விற்கு பயந்தது கோத்தா!

 

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை எதிர்வரும் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கம் மிக விரைவாக மாகாணசபைத் தேர்தலை தற்போது நடத்த திட்டமிட்டுள்ளமைக்கான காரணம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

எனினும் தற்போது அனைத்து மாகாணங்களும் அந்தந்த ஆளுநர்களில் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பிரச்சினை இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்திலும் உள்ளது.

எனவே இதன் காரணமாகவும் தேர்தலை விரைவாக நடத்த அரசாங்கம் திட்டமிட்டிருக்கலாமென்றும் கூறப்படுகிறது.

இதேவேளை மாகாணசபை தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் நடைமுறைக்கான சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று ஒரு உயர் மட்ட அரசு வட்டாரம் நேற்று கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.