வான் தாக்குதல் ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ஜோ பைடன் சொல்கிறார்!

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு உருவானது.

இந்த மோதல் படிப்படியாக வளர்ந்து வந்த சூழலில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.‌

அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் உத்தரவின் பேரில் நடந்த இந்த ராணுவ நடவடிக்கைக்கு ஈரான் கடும் கோபத்தை வெளிப்படுத்தியது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உருவானது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஈரான் உடனடியாக பதிலடி கொடுக்காமல் அமைதி காத்தது. அதேசமயம் சம்பவம் நடந்த பல நாட்களுக்குப் பிறகு காசிம் சுலைமானின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளில் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்தனர்.‌

ராணுவ தளம் மீது தாக்குதல்
அது மட்டுமின்றி காசிம் சுலைமானியின் கொலைக்குப் பிறகு ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீதும், தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்தும் அடிக்கடி தாக்குதல் நடத்தத் தொடங்கின.

இந்த சூழலில் அமெரிக்காவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றுள்ளார். இவரது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா ஈரானுக்கு இடையிலான மோதல் முடிவுக்கு வர இருதரப்பும் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்த நிலையில்தான் கடந்த 15-ந் தேதி ஈராக்கின் இர்பில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தங்கியுள்ள ராணுவ தளத்தின் மீது 10-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒப்பந்த ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் அமெரிக்க வீரர் ஒருவர் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்கா கொடுத்த பதிலடி
இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் சிரியாவில் ஈராக்கின் எல்லையை ஒட்டிய பகுதிகளில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் நிலைகளை குறி வைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது.‌ இதில் 20-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்டவை நிர்மூலமாக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு ஜோ பைடன் எடுத்த முதல் ராணுவ நடவடிக்கை என்பதால் இது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

ஈரான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
அதேசமயம் திடீர் அரசியல் திருப்பமாக ஜோ பைடனின் சொந்த கட்சியானா ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் சிலரே இந்த ராணுவ நடவடிக்கையை கண்டித்துள்ளனர். ஆனால் குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் பலர் இது சரியான நடவடிக்கை என ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதல் ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதல் குறித்து ஜோ பைடனிடம் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.‌

அதற்கு ஜோ பைடன் பதிலளிக்கையில் ‘‘சிரியாவில் அமெரிக்க வான்வழி தாக்குதலை அங்கீகரிப்பதற்கான எனது முடிவை ஈரான் பார்க்க வேண்டும். இது அமெரிக்க நலன்களை அல்லது அமெரிக்க குடி மக்களை அச்சுறுத்தும் பயங்கரவாத குழுக்களின் ஆதரவுக்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.‌ நீங்கள் தண்டனை இன்றி செயல்பட முடியாது கவனமாக இருந்து கொள்ளுங்கள்’’ என கூறினார்.

ஜோ பைடனின் எச்சரிக்கை குறித்து ஈரான் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.