வேலைக்கு போறீங்களா? திருட போறீங்களா? உரிமையாளர் வீட்டில் 10 லட்சம் திர்ஹாம் திருட்டு!

துபாய் நகரில் லெபனான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவரது வீட்டில் 26 வயதான உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் வேலை செய்து வந்தார். இந்தநிலையில், சம்பவத்தன்று வீட்டின் உரிமையாளர் வெளியில் சென்ற நேரம் பார்த்து அப்பெண் அங்கிருந்த 10 லட்சம் திர்ஹாம் பணத்தை திருடினார். பின்னர் அந்த பணத்தை யாருக்கும் தெரியாமல் வெளிநாடு சென்ற தனது நண்பரிடம் கொடுத்து அனுப்பினார்.

இந்தநிலையில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் திர்ஹாம் பணம் காணாமல் போனதை பார்த்து வீட்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் பணிபுரிந்து வந்த பெண் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த பெண் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அந்த பெண் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த துபாய் கோர்ட்டு, உரிமையாளர் வீட்டில் 10 லட்சம் திர்ஹாம் திருடிய பணிப்பெண்ணுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் தண்டனைக் காலம் முடிந்த பின்னர் அந்த பெண்ணை நாடு கடத்தவும் உத்தரவு பிறப்பித்தது.