சேவல் சண்டையில் விபரீதம்: உரிமையாளரை கொன்ற சேவலுக்கு பொலிஸ் கொடுத்துள்ள தண்டனை!

பல்வேறு மாநிலங்களில் சேவல் சண்டை போட்டிகள் சட்ட விரோதமாக நடத்தப்படுகின்றன. போலீஸ் கண்ணில் படாத இடங்களில் ஒன்று சேரும் சேவல் உரிமையாளர்கள், பல லட்சம் ரூபாயை பந்தயம் கட்டி இந்த போட்டிகளை நடத்துகின்றனர்.

இந்த சண்டையில் சேவல்களின் கால்களில் கூர்மையான கத்திகளை கட்டுவார்கள். 2 சேவல்களும் ஆக்ரோஷமாக சண்டையிடும்போது, இந்த கத்திகளால் பலத்த காயம் ஏற்படும். இதில், சில நேரங்களில் சேவல்கள் பரிதாபமாக இறப்பதும் உண்டு.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் பகுதியில் சட்ட விரோதமாக ஒரு கும்பல் சேவல் சண்டை நடத்தியது. இதில் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் சேவல் சண்டைக்கு தனது சேவலுடன் சென்றிருந்தார். இதில், 16-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அப்போது, சதீஷ் தனது சேவலை சண்டைக்கு தயார் செய்வதற்காக, அதன் கால் களில் பளபளக்கும் கூர்மையான கத்திகளை கட்டிக் கொண்டிருந்தார்.

அந்த சேவல் அவரிடம் இருந்து ஓட முயற்சித்தது. அதை பிடிக்க முயன்ற போது சேவல் காலில் கட்டப்படிருந்த கத்தி எதிர்பாராதவிமாக சதீஷின் இடுப்பில் குத்தி கிழித்தது. இதில் அவர் வலியால் அலறி துடித்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து சேவல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சேவலையும், அதன் காலில் கட்டப்பட்ட கத்தியையும் கோர்ட்டில் காட்சிப்படுத்த வேண்டும். என்பதற்காக சேவலை போலீசார் கட்டி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.