“என்னங்க இவரு, ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்காரு??..” ‘வாகன்’ ஷேர் செய்த ‘ஃபோட்டோ’… கடுப்பான இந்திய ‘ரசிகர்கள்’!!

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டி, அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றிருந்த நிலையில், இரண்டு நாட்களுக்குள்ளேயே இந்த டெஸ்ட் போட்டி முடிவடைந்தது.

இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த போட்டியில், சுழற்பந்து வீச்சாளர்களே அதிகம் ஆதிக்கம் செலுத்தியிருந்த நிலையில், அகமதாபாத் பிட்ச் மோசமாக இருந்ததாகவும், இந்திய அணிக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்தாகவும் முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

அதிலும் குறிப்பாக, மைக்கேல் வாகன் தொடர்ந்து இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள பிட்ச்சை குறை கூறி வந்தார். நான்காவது டெஸ்ட் போட்டியும் அகமதாபாத் மைதானத்திலேயே நடைபெறவுள்ளதால், அடுத்த போட்டியிலும் இந்திய அணிக்கு சாதகமாகவே பிட்ச் தயார் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்து வருகிறார்.

தொடர்ந்து தனது சமூக வலைத்தளங்களில் அகமதாபாத் பிட்ச் குறித்து பேசி வரும் மைக்கேல் வாகன், தற்போது ஃபேஸ்புக் பக்கத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி பிட்ச் இப்படி தான் இருக்கும் என்பதை கிண்டல் செய்து புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

இரண்டு மாடுகளுடன் நபர் ஒருவர் வயலை உழும் புகைப்படத்தை பதிவிட்டு, நான்காவது டெஸ்ட் போட்டிக்கு அகமதாபாத் மைதானம் சிறப்பாகி தயாராகி வருகிறது என்றும், முதலில் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாவும், ஐந்தாம் நாளில் பந்து மெல்ல சுழலும் வகையில் பிட்ச் வடிவைமைப்பாளர் தயார் செய்து வருகிறார் என்றும் வாகன் நக்கலாக குறிப்பிட்டுள்ளார்.

முதல் நாளில் இருந்தே பந்து நன்கு சுழன்று வருவதை தான் வாகன் அப்படி கிண்டலாக சுட்டிக் காட்டியுள்ளார். இதற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலர், எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். பிட்ச் நன்றாக தான் இருக்கிறது என்றும், இங்கிலாந்து அணி தோற்பதால் தான் வாகன் அப்படி தவறான கருத்தை சுட்டிக் காட்டுவதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர்.