டிக்டாக்கில் உடற்பயிற்சி செய்த 81 வயது ஜெர்மன் பாட்டி.. வயது வெறும் நம்பர்தான் என்னும் ஹேஷ்டேகுடன் வைரல்..

எரிகா ரிஷ்கோ என்ற பாட்டிக்கு வயது 81, ஆனால் உடற்பயிற்சி இலக்குகளை அமைக்க வயது ஒன்றும் அவருக்கு தடையாக இல்லை. கொரோனா வைரஸ் தொற்று பயங்கரமாக பரவத் தொடங்கியதை அடுத்து ஜெர்மனியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது டிக்டாக்கில் தனது முதல் 12 வினாடி வீடியோவை வெளியிட்டிருந்தார் எரிகா. வீடியோ கிளிப்பில் எரிகா ரிஷ்கோ தனது கணவருடன் பிரபலமான சா-சா ஸ்லைடு லைன் டான்ஸை ஆடியிருந்தார். பின்னர் இந்த வீடியோ இண்டர்நெட்டில் பயங்கர வைரலானது.

எரிகா டிக்டாக்கில் இப்போதுவரை 100-க்கும் மேற்பட்ட வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோக்களில் அவர் பெரும்பாலும் உடற்பயிற்சி செய்வதைக் காணலாம். டான்ஸ் ஸ்டெப்களை மட்டுமல்லாமல் ப்ளங்ஸ் மற்றும் புல்-அப்களை சிரமமின்றி எளிதில் செய்து காண்போரை அசரடிக்கிறார். எரிகா ரிஷ்கோ மற்றவர்களை ஆரோக்கியமாக இருக்க ஊக்குவிக்கவே இதுபோன்ற வீடியோக்களை போஸ்ட் செய்து வருகிறார். “உடலை சோம்பலாக வைத்திருக்காதீர்கள், நகர்ந்து ஏதாவது செய்யுங்கள்! ஒரு மூலையில் உட்கார்ந்து மோப் செய்யாதீர்கள். அது மிக மோசமானது” என்று ராய்ட்டர்ஸ் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

டிக்டாக்கில், எரிகா ரிஷ்கோ சுமார் 125,000 பின்தொடர்பவர்களைக் கொண்டிருக்கிறார். இவரின் மகள் தான் வீடியோகிராபர். இந்த வயதிலும் பாட்டியின் அழகும் ஸ்டைலும் அப்படியேதான் உள்ளது. 81 வயது பாட்டியின் இந்த வீடியோ பல இளம் தலைமுறையினருக்கு உத்வேகத்தை அளிக்கிறது. உடற்பயிற்சி செய்வதைத் தவிர, பாட்டியும் பாட்டியின் கணவரும் டான்ஸ் ஸ்டெப்புகளை போட்டு பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்கள்.

“நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் இப்போது இருப்பதைப் போல முன்பு ஒருபோதும் தன்னம்பிக்கையுடன் இருந்ததில்லை” என்றும் அந்த பாட்டி உற்சாகமாக தெரிவிக்கிறார். நீங்கள் எரிக்கா பாட்டி செய்யும் உடற்பயிற்சிகளை முயற்சித்து ஆரோக்கியமாக இருங்கள்.

வயதானவர்கள் செய்யவேண்டிய பொதுவான சில உடற்பயிற்சிகள்..

நடைப்பயிற்சியின் அடுத்த நிலையான ‘பிரிஸ்க் வாக்கிங்’ எனப்படும் விறுவிறுப்பான நடைப்பயிற்சியை வயதானவர்கள் மேற்கொள்ளலாம். இது ஒருவகை தீவிரம் குறைந்த ஏரோபிக் பயிற்சி போன்றது. இது இதயத்துடிப்பை சீராக வைத்துக்கொள்ள உதவும். தசைகளுக்கும் நன்மை பயக்கும். முழங்கால் அல்லது கணுக்கால் பாதிப்புக்கு ஆளானவர்கள் ஜாக்கிங் செல்வதை விட இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்.

‘ஸ்டேஷனரி சைக்கிளிங்’ எனப்படும் ஒரே இடத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் சைக்கிளிங் பயிற்சியை தொடரலாம். இந்த பயிற்சியை மேற்கொள்ள ஜிம்முக்கு செல்லவேண்டியதில்லை. வீட்டிலேயே வாங்கி வைத்து தினமும் குறிப்பிட்ட நேரம் பயிற்சியில் ஈடுபடலாம். இது மூட்டுகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்காது. காயமடையும் வாய்ப்புகளும் குறைவு.

‘ஸ்குவாட்ஸ்’ எனப்படும் குனிந்து நிமிரும் உடற்பயிற்சியையும் வயதானவர்கள் மேற்கொள்ளலாம். கால்களை தரையில் ஊன்றிக்கொண்டு மூட்டு பகுதிகளை முன்னோக்கி வளைத்துக்கொண்டு அதற்கு நேராக கைகளின் இரு மூட்டுகளையும் மடக்கியபடி குனிந்து நிமிர்ந்து பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.

கை கால்களை நீட்டியும் மடக்கியும் செய்யும் உடற்பயிற்சிகள் முதுகு தசைகள் மற்றும் தோள்பட்டைகளை பலப்படுத்த உதவும். சிறந்த உடல் தகுதியையும் ஏற்படுத்தி கொடுக்கும். கழுத்து, முதுகு, மார்பு, அடிவயிறு, கைகள், தொடைகள் உள்பட பல்வேறு தசைகளை இலகுவாக்கும்.

உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன்பு வார்ம் அப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியம். அவை உடல் நேரடியாக கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதை தவிர்த்து இலகுவாக செயல்பட வைக்கும். உடற்பயிற்சிக்கு ஏற்ப அனைத்து தசைகளையும் இலகுவாக்குவதற்கு உதவும். மேற்சொன்ன உடற்பயிற்சி டிப்ஸ்கள் உண்மையில் வயதானவர்களுக்கு மட்டுமல்ல இளசுகளுக்கும் நன்மை அளிக்கும்.