“‘பீச்’ ஓரமா நடந்து போயிட்டு இருந்தப்போ… வழியில இப்படி ஒரு ‘அதிர்ஷ்டம்’ அடிக்கும்னு ‘கனவு’ல கூட நெனச்சிருக்க மாட்டாங்க?!…” ‘மகிழ்ச்சி’யில் திக்கு முக்காடிய ‘பெண்’!!

கடற்கரை அருகே நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவருக்கு, சற்றும் எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டம் ஒன்று அடித்ததால், ஆச்சரியத்தில் திக்கு முக்காடிப் போயுள்ளார் அந்த பெண்.

தாய்லாந்தின் Nakhon Si Thammarat என்னும் மாகாணத்தில் அமைந்துள்ள கடற்கரை ஒன்றின் அருகே, சில தினங்களுக்கு முன் சிரிபர்ன் நியாம்ரின் (Siriporn Niamrin) என்ற 49 வயதான பெண்மணி ஒருவர், கடுமையான மழை ஒன்று பெய்து ஓய்ந்த பிறகு நடந்து சென்றுள்ளார்.

அப்போது, பெரிதாக வெள்ளை உருவத்தில், பந்து போன்ற பொருள் ஒன்று கரைக்கு அருகே மிதந்து கொண்டிருப்பதை அவர் கண்டுள்ளார். அதனருகே சென்ற போது, மீன் வாசனை வருவதை உணர்ந்த நிலையில், அதனை வீட்டிற்கே எடுத்துச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, தனது வீட்டிற்கு அருகே உள்ளவர்களிடம் அந்த வெள்ளை பொருள் குறித்து கேட்டுள்ளார்.

அப்போது அவர்கள், Ambergris எனப்படும் திமிங்கலத்தின் வாந்தியாக இருக்கலாம் என கூறியுள்ளனர். சுமார் 12 அங்குல அகலமும், 24 அங்குல நீளமும் கொண்ட அந்த பொருள், கிட்டத்தட்ட 6 கிலோவுக்கு மேல் இருந்தது. அப்படி இது, உண்மையாக Ambergris ஆக இருக்கும் பட்சத்தில், இதன் விலை மதிப்பு சுமார் 186500 பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி வரை) ஆகும்.

நடுக்கடலில் உள்ள திமிங்கலங்கள், கடலிலுள்ள மீன்களை உண்ட பிறகு, அதில் சிலது செமிக்காமல், திமிங்கலத்தின் குடலிலேயே தங்கி விடும். அந்த மிச்சம் வெளியே செல்லாமல், திமிங்கலத்தின் வயிற்றிலேயே ஒரு பந்து போல உருவான பிறகு, அந்த எச்சத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு திமிங்கலம் வாந்தியாக வெளியே தள்ளும். வாசனை திரவியம் செய்ய, Ambergris என்னும் இந்த பொருள் மிகவும் முக்கியமானதாக தேவைப்படுவதால், அதற்கேற்ற படி, இதன் விலை மதிப்பும் அதிகமாக இருக்கும்.

மேலும், அந்த பொருள் Ambergris தானா என்பதை அறிந்து கொள்ள, அதனை தீயில் உருக வைக்கும் போது, அதிலிருந்து ஒரு வாசனை வெளிப்படும். இந்நிலையில், அது திமிங்கலத்தின் வாந்தி என்பதை அறிய, நியாம்ரின் அதனை தீயில் உருக்கிப் பார்த்துள்ளார். அப்போது, அது உருகி மீண்டும் கடினமாகியுள்ளது. மேலும், அதிலிருந்து வாசனை வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அது திமிங்கலத்தின் வாந்தி என்பதை உறுதி செய்ய, நியாம்ரின் வீட்டிற்கு அதிகாரிகள் வந்து சோதனை செய்யவுள்ளனர்.

இது பற்றி நியாம்ரின் கூறுகையில், இவ்வளவு பெரிய துண்டை கண்டுபிடித்தது எனது அதிர்ஷ்டம் என்று தான் நான் நினைக்கிறேன். நான் அதனை என் வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளேன். அது எனக்கு நிறைய பணத்தை கொண்டு சேர்க்கும் என்றும் நான் நம்புகிறேன். அதனை பரிசோதனை செய்து பார்க்கவும் எனது பகுதியிலுள்ள அதிகாரிகளிடம் கூறியுள்ளேன்’ என மகிழ்ச்சியுடன் நியாம்ரின் தெரிவித்துள்ளார்.