‘பிட்ச்’ பத்தி சும்மா குத்தம் சொல்லிட்டு இருக்காங்க…” பங்கமாக ‘கலாய்த்த’ ரோஹித் ஷர்மா… பதிலுக்கு அவங்க ‘மனைவி’ பண்ண கமெண்ட் தான் ‘ஹைலைட்டே’!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே, அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த டெஸ்ட் போட்டி, இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்த நிலையில், அகமதாபாத் மைதானத்தின் பிட்ச் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்திய அணிக்கு சாதகமாக பிட்ச் அமைந்திருப்பதாகவும் இங்கிலாந்து முன்னாள் வீரர்கள், தொடர்ந்து குறை கூறி வருகின்றனர்.

அடுத்த டெஸ்ட் போட்டியும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளதால் அப்போதும் இதே போலத் தான் மோசமாக பிட்ச் வடிவமைக்கப்படும் என தொடர்ந்து விமர்சனமும் செய்து வருகின்றனர். இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பின் பேசிய இந்திய அணி வீரர் ரோஹித் ஷர்மா, பிட்ச் நன்றாக தான் இருந்தது என்றும், பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் நேராக வந்த பந்தை அடிக்க முடியாமல் தான் அவுட்டாகினர் என்றும் விமர்சனம் செய்திருந்தவர்கள் அனைவருக்கும் பதிலடி கருத்து ஒன்றை அவர் கூறியிருந்தார்.

மேலும், நாங்கள் செல்லும் வெளிநாடுகளிலும் அந்தந்த நாட்டு வீரர்களுக்கு ஏற்ப தான் பிட்ச் தயார் செய்யப்படுகிறது என்றும், நாங்கள் அப்படி செய்வதில் என்ன தவறு இருக்கிறது என்பது போன்ற கேள்விகளையும் ரோஹித் எழுப்பியிருந்தார். ரோஹித் ஷர்மாவின் கருத்து மற்றும் கேள்விகள் மேலும் பரபரப்பை கிளப்பியிருந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் மைதானத்தில் படுத்து கிடக்கும் போட்டோ ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘நான்காவது டெஸ்ட் போட்டியில் பிட்ச் எப்படி இருக்கும் என்பதை யோசித்துக் கொண்டிருக்கிறேன்’ என பிட்ச்சை விமர்சனம் செய்து வருபவர்களை கிண்டல் செய்யும் வகையில், அதிரடி கேப்ஷன் ஒன்றையும் ரோஹித் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு, நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வந்ததையடுத்து, ரோஹித் ஷர்மாவின் மனைவி அதில் செய்த கமெண்ட் ஒன்றும் அதிக ஹிட்டடித்து வருகிறது.

ரோஹித் ஒழுங்காக பயிற்சி செய்யாமல் மைதானத்தில் படுத்து கிடப்பதைக் குறிப்பிட்ட ரித்திகா, ‘நீங்கள் மட்டும் இப்படி இருந்து கொண்டு, சோம்பேறித்தனமாக நான் இருப்பதை மட்டும் எப்போதும் கேலி செய்கிறீர்கள்’ என கிண்டலாக கேள்வி எழுப்பியிருந்தார்.

பிட்ச்சை தொடர்ந்து விமர்சனம் செய்து வருபவர்களை கிண்டல் செய்திருந்த ரோஹித் ஷர்மாவை, ஒரு படி மேலே சென்று, அவரது மனைவி ரித்திகாவும் பதிலுக்கு கிண்டல் செய்துள்ளது ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது.