ஆப்பிரிக்காவின் மிக உயரிய கிளிமஞ்சாரோ மலை சிகரம் மீது 9 வயது இந்திய சிறுமி; என்ன நடந்தது!

ஆப்பிரிக்க கண்டத்தின் மிக உயரிய மலைச் சிகரமான கிளிமஞ்சாரோவின் மீது ஏறிய 2வது இளம் வயது நபர் என்ற சாதனையை இந்தியாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி படைத்திருக்கிறார்.

ஆந்திர மாநிலம் அனந்தபூரைச் சேர்ந்த ரித்விகா ஸ்ரீ என்ற 9 வயது சிறுமி ஆப்பிரிக்க கண்டத்தின் மிக உயரிய மலைச் சிகரமான கிளிமஞ்சாரோவின் மீது ஏறி சாதனை படைத்திருக்கிறார். தான்சானியா நாட்டில் உள்ள கிளிமஞ்சாரோ மலை சிகரம் மீது ஏறிய இளம் வயதுடையவர்களில் இவர் 2ம் இடத்தில் உள்ளார். மேலும் கிளிமஞ்சாரோ மலை சிகரம் மீது ஏறிய ஆசிய நாட்டைச் சேர்ந்த இளம்
நபர் என்ற சாதனையையும் ரித்விகா ஸ்ரீ படைத்துள்ளார்.

பள்ளியில் படித்து வரும் ரித்விகா ஸ்ரீ, கடல் மட்டத்தில் இருந்து 5,681 மீட்டர்கள் கிளிமஞ்சாரோ மலை சிகரத்தின் Gilman’s point-ஐ அடைந்துள்ளார். வழிகாட்டியான தனது தந்தையுடன் சேர்ந்து அவர் மலை ஏற்றம் செய்திருக்கிறார்.

மாணவி ரித்விகாவின் தந்தை கிரிக்கெட் பயிற்சியாளர் மற்றும் விளையாட்டு ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். தெலங்கானாவில் உள்ள போங்கிர் என்ற மலை ஏற்றப்பள்ளியில் பயிற்சி பெற்றுள்ளதுடன், லடாக்கில் 2ம் நிலை மலை ஏற்றப் பயிற்சியையும் மாணவி ரித்விகா பெற்றுள்ளார்.

அனந்தபூரின் மாவட்ட ஆட்சியரும், மேஜிஸ்திரேட்டுமான காந்தம் சந்துருடு மாணவி ரித்விகா ஸ்ரீயின் சாதனையை பாராட்டி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “கிளிமஞ்சாரோ மலை சிகரம் மீது ஏறிய உலகின் இரண்டாவது இளைய மற்றும் ஆசியாவின் இளைய பெண் என்ற பெருமையை அனந்தபூரின் ரித்விகா ஸ்ரீ பெற்றுள்ளார் அவருக்கு என் வாழ்த்துக்கள். பல இடையூருக்கு மத்தியிலும் நீங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டீர்கள். பிறருக்கு ஊக்கமளித்துக் கொண்டிருங்கள்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த மாணவர் நிதிஷ்குமார் ஜனவரி 26ம் குடியரசு தினத்தன்று கிளிமஞ்சாரோ மலைச்சிகரத்தில் ஏறி இந்திய நாட்டின் தேசிய கொடியை பறக்க விட்டார்.

இது தொடர்பாக நிதிஷ் குமார் கூறும்போது, “என் கடினங்களைச் சமாளிக்க மக்கள் உதவினார்கள். இப்போது உலகின் 7 மலையுச்சிகளை தொட குறிக்கோள் வைத்துள்ளேன், என் இந்த பயணத்தில் உதவிய திருநங்கைகளுக்காகவும் கொடியை நான் ஏற்றினேன்” என்றார். கிளிமாஞ்சாரோ மலையில் ஏறுவதற்கு தனக்கு 3 நாட்கள் ஆனது என்றார் நிதிஷ் குமார்.

ஆப்பிரிக்க நாட்டின் கிளிமாஞ்சாரோ சிகரத்தில் மற்ற நாட்டினர் தங்கள் கொடியை ஏற்ற அனுமதிக்கப்படுகிறது.