“இந்த ‘வாத்தி கம்மிங்’ ஒரு மாறி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு…” மூவ்மென்ட்ஸ் போட்ட ‘கிரிக்கெட்’ வீரர்கள்… “இந்த தடவ யாரு எல்லாம்ன்னு பாருங்க”!!

நடிகர் விஜய் நடித்து, சமீபத்தில் வெளியாகியிருந்த திரைப்படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டடித்திருந்தது. அதிலும் குறிப்பாக, ‘வாத்தி கம்மிங்’ என்னும் பாடல், வேற லெவலில் ஹிட்டாகியிருந்தது. ரசிகர்கள் அதிகம் பேர் இந்த பாடலுக்கு நடனமாடி, அதனைத் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்த நிலையில், ‘வாத்தி கம்மிங்’ ஃபீவர் கிரிக்கெட் வீரர்கள் சிலரையும் ஆட்டிப் படைத்து வருகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது, இந்திய வீரர் அஸ்வின் வாத்தி கம்மிங் பாடலில் வரும் நடன அசைவுகளை மைதானத்திற்குள் செய்தார். இதனைக் கண்ட ரசிகர்கள் ஆர்பரித்தனர். இதனைத் தொடர்ந்து, போட்டிக்கு பிறகு இந்திய வீரர்கள் அஸ்வின், ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டனர்.

இந்நிலையில், மற்றொரு இந்திய வீரரான ஹர்பஜன் சிங், பெண் ஒருவருடன் இணைந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ, நெட்டிசன்களிடையே அதிகம் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியில் கேரளா அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றதைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் சச்சின் பேபி உள்ளிட்ட வீரர்கள் சிலரும், வாத்தி கம்மிங் பாடலுக்கு ஒன்றாக சேர்ந்து நடனமாடியுள்ளனர்.

வாத்தி கம்மிங் பாடல் மற்றும் அதில் வரும் நடன அசைவுகள், ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாது, கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் அதிக வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.