“நீங்க பயப்பட வேண்டிய தேவையே இல்ல?… ‘இங்கிலாந்து’ என்ன அவ்ளோ பெரிய டீமா??…” ‘அக்தர்’ கருத்தால் ‘பரபரப்பு’!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே, அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், அந்த மைதானத்தின் பிட்ச் மிகவும் மோசமாக தயார் செய்யப்பட்டதாக முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்குள் இந்த டெஸ்ட் போட்டி முடிவடைந்ததால், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு இப்படியா மைதானத்தை தயார் செய்வது என்பது போன்ற புகார்களையும் அவர்கள் முன் வைத்திருந்தனர்.

இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளதால், அப்போதும் பிட்ச்சின் தரம் மோசமாக தான் இருக்கும் என்றும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய மைதானம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரும் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். ‘இப்படிப்பட்ட ஒரு மைதானத்தில், டெஸ்ட் போட்டி நடைபெறுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். பந்து காரணமில்லாமல் சுழன்று செல்கிறது. இதனால், இந்த போட்டியும் இரண்டு நாட்களில் முடிவடைந்தது. இது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஆரோக்கியமில்லை.

ஒரு வேளை, இந்திய அணி 400 ரன்கள் அடித்து, இங்கிலாந்து அணி 200 ரன்னுக்குள் அவுட்டாகி இருந்தால், இங்கிலாந்து அணி மோசமாக ஆடியது என கூறலாம். ஆனால், இந்தியாவே 145 ரன்கள் அடித்தது என்பது தான் பிரச்சனையே. ஆஸ்திரேலிய மைதானங்களிலேயே இந்திய அணி வெற்றி பெற்ற போது, இந்திய மைதானங்களை ஏன் தரமற்ற முறையில், சூழலுக்கு சாதகமாக தயார் செய்ய வேண்டும்?.

இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்த அணி. மைதானங்கள் சாதகமாக இல்லை என்றாலும் கூட, இங்கிலாந்து அணியை எளிதில், இந்தியாவால் வீழ்த்த முடியும். இங்கிலாந்து அணியைக் கண்டு அஞ்ச வேண்டிய தேவையுமில்லை. இதனை இந்திய அணி உணர்ந்து, அடுத்த போட்டியில் தரமான பிட்ச்சை தயார் செய்யும் என நான் நம்புகிறேன்’ என அக்தர் கூறியுள்ளார்.