புனிதமான உண்ணா விரதங்களை தவறாக பயன்படுத்தி கேவலப்படுத்த வேண்டாமே …

 

அதிர்வு இணையத்திற்கு வாசகர் அனுப்பிய ஒரு மின்னஞ்சல்… ஏன் உள்ளக் குமுறல் என்றும் கூறலாம்.

சமீபத்தில் எம்மில் பலர் லண்டனில் நடக்கும் ஒரு உண்ணாவிரம் பற்றி அறிந்திருப்போம். அரசாங்கத்திற்கு அறிவிக்காமல், பொலிசாருக்கு நிலமை தெரியாமல், ஒரு சிறு குழு ஒன்று ஒருவரை பறவைக் காவடி(உண்ணாவிரதம்) ஏற்றி, கீழே நின்று அரோகரா சொல்வது போல இருக்கிறது. அதிலும் உண்ணா விரதம் இருக்கும் அன் நபர், 2 நாட்களில் 4 தடவை புடவை மாற்றி, அலங்காரம் செய்து பொலிவாக உள்ளார், தனது தந்தைக்கு சொந்தமான கோவிலில் உண்ணாவிரம் இருந்தார். பின்னர் நேற்றுடன்(02) தான் தனது வீட்டில் சென்று உண்ணா விரதம் இருப்பதாக தற்போது கூறியுள்ளார். உண்ணா விரதம் இருந்து தன் உயிரை தியாகம் செய்து, லட்சக் கணக்கான தமிழர்களை ஒன்று திரட்டியவர் அண்ணன் திலீபன்.

ஈழத் தமிழர்களை பொறுத்தவரை அதன் பின்னர், 2009ல் பரமேஸ்வரன் லண்டனில் நடத்திய உண்ணாவிரதம் பற்றி நாம் அறிந்திருப்போம். அன்றும் மக்கள் ஆயிரக் கணக்கில் கூடினார்கள். பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. மருத்துவர்கள் அம்பூலன்ஸ் சகிதம் அங்கே வந்து நின்றார்கள். அரசாங்கத்தின் கவனம் எம்மீது திரும்பியது. அப்படி பெரும் கட்டுப் பாடோடு நேர்த்தியாக செய்யப்பட்ட உண்ணாவிரதத்தையே பரமேஸ்வரன் பேர்கர் சாப்பிட்டார் என்று கூறி பொய்யான செய்தியை வெளியிட்டது பிரித்தானிய சன்(SUN) பேப்பர். பின்னர் அவருக்கு நஷ்ட்ட ஈட்டையும் வழங்கியது(அது வேறு கதை)

ஆனால் இன்று நடக்கும் உண்ணா விரதம் என்பது பெரும் கேலிக் கூத்தாக இருக்கிறது என்பதே மக்களின் ஒட்டு மொத்த கருத்தாக உள்ளது. அவர் உண்ணாவிரதம் இருக்கிறார் என்பதனை அரசுக்கு சரியாக தெரியப்படுத்தவில்லை என்பது முதல் பிழை. அது போக எந்த MPக்கள் கூட வந்து பார்க்கவில்லை.  அவர்களுக்கும் இது சரியாக தெரியாது 2வது பிழை.  குறித்த உண்ணாவிரத்தை டவுனிங் வீதிக்கு முன்னால் நடத்தி இருக்கலாம். இல்லையே சுழற்ச்சி முறை என்று கூறி, பலர் மாறி மாறி உண்ணாவிரதத்தை மேற்கொண்டு இருக்கலாம். இப்படி எந்த ஒரு சரியான திட்டமிடலும் இன்றி, ஒரு சிறிய குழு திடீரென உண்ணாவிரதம் என்று கூற,…. வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டு விட்டு, உண்ணாவிரதத்தை ஆரம்பித்து. இறுதியில் தமிழர்களை முட்டாள்களாக்கி, இதனையும் ஒரு கேலிக் கூத்தாக மாற்றியுள்ளார்கள் சிலர்.

ஒரு பெண் உண்ணா விரதம் இருக்கிறார் என்ற உடனே எம்மில் பலர் உணர்சிவசப்பட்டு, அதனை பார்ப்பதும். எந்த விடையத்தை உணர்சிவசப்பட்டு செய்வதும் முறையல்ல. சரியான திட்டமிடல் இருக்கவேண்டும். உணர்சிவசப்பட்டு பரபரப்பாக செய்யும் எந்த காரியங்களும் வெற்றியடைவது இல்லை.

இந்த உண்ணாவிரத்தை ஆரம்பித்தது… யார்… யார் என்பது குறித்து நான் தெளிவு படுத்த தேவை இல்லை. இதில் பெரும் பணத்தை சம்பாதிக்கும் சட்ட வல்லுனர்களும் அடங்குகிறார்கள். இவர்களுக்கு இதில் என்ன லாபம் என்பது பலருக்கு தெரியாத விடையம். இப்படி பல போராட்டங்களை இவர்களே தூண்டி விட்டு, அதில் விசா இல்லாத நபர்களை கலந்துகொள்ளச் செய்து. பின்னர் அந்த புகைப்படங்களை காட்டி விசா வாங்கிக் கொடுப்பது இந்த சட்ட வல்லுனர்களுன் தொழில். இது நல்ல விடையம் தான். ஆனால் காசு வாங்காமல் செய்து கொடுத்தால் நல்ல விடையம். £6,000 முதல் கொண்டு £10,000 பவுண்டுகளை பெற்று இப்படி தமிழர்களிடமே பணத்தை பறிக்கிறார்கள்.

எனவே பிரித்தானிய மண்ணில் எதனையும் செய்ய முன்னர் இங்கே உள்ள சகல அமைப்புகளோடும் பேசி, கலந்து ஆலோசித்து, ஒருமிக்க முடிவை எடுத்து, அனைத்து தரப்பு ஆதரவோடும் செய்வது நல்லது. அதுவே மக்களின் கவனத்தை மட்டும் அல்ல, அரசாங்கத்தின் கவனத்தையும் ஈர்க்கும். போராட்டம் வெற்றி பெறும். என்று கூறி விடை பெறுகிறேன்.

இவன்
அற்புதன்