கடன் பிரச்னையால் தீக்குளித்த கறிக்கடை உரிமையாளர்.. பதறவைக்கும் சம்பவம்!

10,000 ரூபாய் கடன் பிரச்னையில் கடன் கொடுத்தவர் தாக்கி அவதுாறாகப் பேசியதால், அவமானமடைந்த கறிக்கடை உரிமையாளர் விஜயகுமார் தீக்குளித்துள்ளார். அதன் சிசிடிவி வீடியோ வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்குத் துாண்டியவர் சிக்குவாரா?

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள செட்டிக்காபளையம் பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதான விஜயகுமார். இவர் தாமரைக் குளம் பகுதியில் கறிக்கடை நடத்தி வந்தார். இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவரிடம் கடனாக 20000 ரூபாய் வாங்கியிருந்தார்.

வாங்கிய கடனில் 10000 ரூபாயைத் திருப்பிச் செலுத்திவிட்டார். மீதி 10000 ரூபாய் தர வேண்டியிருந்தது. இந்த நிலையில், பிப்ரவரி 26ம் தேதி பொள்ளாச்சி சாலையில் நின்று கொண்டிருந்த விஜயகுமாரை ஜெயப்பிரகாஷ் சந்தித்துப் பேசியுள்ளார். கடன் தொகை 10000 ரூபாயை திரும்பத் தரும்படி வலியுறுத்தியுள்ளார். விஜயகுமார் அவகாசம் கேட்ட நிலையில், அவரைத் தாக்கிய ஜெயப்பிரகாஷ், விஜயகுமாரின் சரக்கு வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்றார்.

தான் தடுத்தும் ஜெயப்பிரகாஷ் கேட்காததால், விரக்தியடைந்த விஜயகுமார் வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தன.

கண்ணிமைக்கும் நேரத்தில் விஜயகுமார் தன்னைக் கொளுத்திக் கொண்டதால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த வழக்கில், ஜெயப்பிரகாஷ் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விஜயகுமார் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஜெயப்பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகுமார் புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதேநேரம் விஜயகுமார் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.