பரோட்டாவுக்காக ஏற்பட்ட தகராறில் இளைஞர் படுகொலை.. நடந்தது என்ன?

கோவை மாவட்டம் தடாகம் பகுதியைச் சேர்ந்தவர் 52 வயதான வெள்ளிங்கிரி. இவர் அங்குள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வருகின்றார். இவருடன் அதே சூளையில், ஜெயக்குமார் உள்ளிட்ட இளைஞர்களும் பணிபுரிந்து வந்துள்ளனர். திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில், ஜெயக்குமார் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு சூளைக்கு வந்துள்ளார்.

அங்கு தனது அறையில், வெள்ளிங்கிரி பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற ஜெயக்குமார், வெள்ளிங்கிரி சாப்பிட்டுக் கொண்டிருந்த பரோட்டாவில் கை வைத்து எடுத்து சாப்பிட்டுள்ளார். அதற்கு வெள்ளிங்கிரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

மதுபோதையில் இருந்த ஜெயக்குமார் வெள்ளிங்கிரியின் குடும்பத்தைப் பற்றி ஆபாசமாகப் பேசி செங்கல்லை எடுத்து அவர் மீது வீசியுள்ளார். ஆத்திரமடைந்த வெள்ளிங்கிரி அங்கிருந்த உருட்டுக் கட்டையால் ஜெயக்குமாரை கடுமையாகத் தாக்கியதில் முகத்தில் படுகாயமடைந்து அங்கேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த தடாகம் போலீசார் சடலத்தை அகற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.வெள்ளிங்கிரியைக் கைது செய்தனர்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த பரோட்டாவில் கைவைத்து எடுத்ததால் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.