சவுதி இளவரசர் மீது வழக்கு இதே நிலையை ஏன் ராஜபக்ஷர்களுக்கு ஏற்படுத்தக் கூடாது ?

சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி. இவர் அந்தநாட்டின் மன்னரையும், இளவரசர்களையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்தநிலையில் இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பல சர்ச்சைகள் ஆதாரங்கள் எல்லாம் வெளிவந்த பிறகு, சவுதி அரேபியா அரசு கொலை செய்ததை ஒப்புக்கொண்டது. அதன் பின் அதுதொடர்பாக 18 பேரை சவுதி அரேபியா கைது செய்தது. மேலும், அதில் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் சவுதி அரேபியா அரசு தெரிவித்தது. இந்தநிலையில், அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கைதுசெய்ய அல்லது கொலை செய்ய, துருக்கியின் இஸ்தான்புல்லில் ஒரு நடவடிக்கைக்கு சவூதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான் ஒப்புதல் அளித்ததாக நாங்கள் கருதுகிறோம்.

அவர் பச்சைக்கொடி காட்டாமல், இந்த கொலை நடக்க சாத்தியமில்லை. ஜமால் கஷோகி கொல்லப்பட்ட விதம், அதிருப்தியாளர்களை அமைதியாக்க, வன்முறைக்கு ஆதரவளிக்கும் இளவரசரின் நடவடிக்கைக்குப் பொருந்துவது போல் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து முஹம்மது பின் சல்மான் மீது, எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பு, ஜெர்மனியில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த மனுவில், “ஜமால் கஷோகி படுகொலை மூலம் முஹம்மது பின் சல்மான், மனித குலத்திற்கு எதிரான குற்றத்தை இழைத்துள்ளதாக” கூறியுள்ளது. ஜெர்மேனிய சட்டப்படி, அந்தநாட்டின் நீதிமன்றங்கள், தங்கள் நாட்டிற்குத் தொடர்பு இல்லாத சர்வதேச வழக்குகளையும் விசாரிக்க முடியுமென்பதால், எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பு அந்நாட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அதேபோல் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், அந்தநாட்டு நாடாளுமன்றத்தில் முஹம்மது பின் சல்மான் மீது பொருளாதார தடை விதிக்கவும், அவர் அமெரிக்கா வருவதற்குத் தடை விதிக்கவும் என இரண்டு மசோதாக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.