தாகம் தணிக்க குடிநீர் கேட்டு வந்த 13 வயது சிறுமியைக் கொன்று புதைத்த நபர்: மீண்டுமொரு பயங்கரம்!

பெண்கள், குழந்தைகள், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு பெயர் பெற்ற உத்தரப் பிரதேசத்தில் நேற்று நடந்த இன்னொரு அதிர்ச்சிச் சம்பவத்தில் 13 வயது சிறுமியின் உடல் ஒன்று குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷெஹரில் இது தொடர்பாக ஹரேந்திரா என்ற நபரை போலீஸார் கைது செய்தனர். 13 வயது சிறுமியை காணவில்லை என்று பெற்றோர் புகார் அளித்து 6 நாட்களுக்குப் பிறகு குழியிலிருந்து சிறுமியின் உடல் மீட்கப்பட்டதில் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஹரேந்திரா என்ற இந்த 22 வயது தொழிலாளி டெல்லியைச் சேர்ந்தவர். இந்தச் சிறுமி காணாமல் போன போது கிராமத்தில் இவன் இருந்துள்ளான்.

போலீஸ் நடத்திய ‘விசாரணை’யில் உண்மையைக் கக்கிய அவன், சிறுமி தன் வீட்டுக்கு குடிநீர் கேட்டு வந்ததாகவும் அப்போது அந்தச் சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்திருக்கிறான். சிறுமி சத்தம் போட்டு ஊரைக்கூட்ட முயற்சி செய்த போது பயத்தில் சிறுமியை கொலை செய்து தன் வீட்டுக்கு அருகிலேயே குழிதோண்டி புதைத்ததை ஒப்புக் கொண்டான்.

அந்தச் சிறுமி சிரவ்ரா கிராமத்தில் வசித்து வந்தவர். பிப்ரவரி 25ம் தேதி தன் தாய், சகோதரியுடன் வேலைக்குச் சென்றார். வேலை செய்யும் போது தாகம் எடுக்க அருகில் இருந்த வீட்டுக்குச் சென்று குடிநீர் கேட்டிருக்கிறார்.

சென்ற பெண்ணைக் காணவில்லையே என்று தாயும் சகோதரியும் தேடியுள்ளனர். தேடித் தேடி சோர்ந்து போயினர். பிறகு பிப்ரவரி 28ம் தேதி போலீசில் புகார் அளித்தனர். ஆனால் போலீஸார் குழம்பினர், கண்டுப்பிடிக்க முடியாமல் அவர்களும் தவித்தனர்.

இந்நிலையில் செவ்வாயன்று மனை ஒன்றில் பிணம் புதைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் நபர் ஒருவர் பரபரப்புடன் புகார் அளித்தார். தற்போது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட சிறுமிக்கு திக்குவாய் என்று அவரது தந்தை கூறுகிறார்.

2019-ல் பெண்களுக்கு எதிரான வன்முறையில் உ.பி. முதலிடம் வகிப்பதாக தேசிய குற்றப் பதிவேடு கழகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதே போல் போக்சோ சட்டத்தின் கீழ் 7,444 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 6,402, மத்தியப் பிரதேசத்தில் 6,503 கேஸ்கள் பதியப்பட்டுள்ளன.