குழந்தையை தாக்கிய வீடியோ பார்த்திருப்பீர்கள்: பேஸ் புக் காதலால் ஏமாந்த தாயாம் இவர் !

சமூக வலைத்தளங்களில் 3 தினங்களுக்கு முன்னர்,(02.03.2021) அதிகம் பகிரப்பட்ட, பேசப்பட்ட விடயம் யாழ். அரியாலை மணியம் தோட்டப் பகுதியில் உள்ள வீட்டுத் திட்டத்தில் வாழும் 24 வயதான பெண் ஒருவர் தனது ஒன்பது மாதக் குழந்தையை அடிக்கும் காட்சியாகும். சம்பவம் தொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பின்னணியில் குறித்த தாய் இன்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்ற பெண்கள் பலர், கடந்த மாதங்களில் நாட்டுக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டனர். அவ்வாறு நாட்டுக்கு மீண்டும் அழைத்து வரப்பட்ட பெண்களில் சிலர் அங்கு பிறந்த தமது குழந்தைகளுடன் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர். அவ்வாறான பெண்களில் ஒருவரான குறித்த தாய் என அதிர்வு இணையம் அறிகிறது. கடந்த ஜனவரி மாதம் தனது குழந்தையுடன் இலங்கைக்கு வந்துள்ளார்.

குறித்த பெண் கடந்த 2015 ஆம் ஆண்டு பணிப்பெண் தொழில் பெற்று, டுபாய் சென்றதாகவும், குவைட் நாட்டில் உள்ள ஆண் ஒருவருடன் பேஸ்புக் ஊடாக ஏற்பட்ட காதலைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளார்.

தனது காதலனுடன் சேரும் எண்ணத்தில் குறித்த பெண் 2019 ஆண்டு பணிப் பெண்ணாக குவைத் நாட்டுக்கு சென்றுள்ளார். தனது காதலரை இஸ்லாம் மார்க்க முறைப்படி திருமணம் செய்து, இருவரும் கணவன் – மனைவியாக ஒரு அறை வாடகைக்கு எடுத்து வாழ்ந்துள்ளனர். பெண்ணுக்கு கடந்த 03.07.2020 ஆண் குழந்தை பிறந்ததுடன் மூன்று மாதங்கள் கடந்த நிலைமையில், கொவிட் 19 காரணமாக ஏற்பட்ட நெருக்கடி நிலைமையில் குழந்தை உள்ள பெண்களை மீண்டும் அவரவர் நாடுகளுக்கு செல்லுமாறு குவைத் அரசு அறிவித்துள்ளது.

இவ்வாறு இலங்கை வந்தடைந்த அவர், தந்தை இல்லாமல் குழந்தையுடன் வந்த மகள் மற்றும் நிதி – பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பத்தினர் கொடுத்த அழுத்தம், வெளிநாடு சென்று குழந்தையுடன் வந்த காரணத்தால் சமூகம் கொடுத்த அழுத்தம், கணவன் என நம்பும் ஆணிடம் இருந்து நிதி உதவி இல்லாமை, உழைத்த பணத்தில் தனக்கு அவசர கடவுச் சீட்டு மற்றும் குழந்தைக்கான கடவுச் சீட்டு என தூதரக செலவு, வருமானம் இல்லாமை, பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் பிரவசத்திற்குப் பின்னரான மன அழுத்தம் என பல்வேறு அழுத்தங்களுடன் குறித்த பெண் இருந்துள்ளார்.

அந்தப் பெண்ணிடம் “இவ்விடயத்தில் உங்களுக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்டபோது, தான் “தனது குழந்தையுடன் குவைத் நாட்டிற்கு செல்ல வேண்டும் அல்லது இலங்கைப் பிரஜை அல்லாத கணவர் இலங்கைக்கு வர வேண்டும்” எனக் கூறினார். கூடவே “வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு கணவரிடம் இருந்து பணமும், கணவருடன் பேசுவதற்கு தொலைபேசியும் வேண்டும்” என்று நீதிமன்றில் மன்றாடியுள்ளார். ஆனால் கணவரிடம் இருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை. உதவிகளும் கிட்டவில்லை. எல்லாம் பேஸ் புக் காதல் செய்யும் லீலை. இந்த நவீன உலகில் ,இவ்வாறு பல பேதைப் பெண்கள் அவல நிலைக்கு தள்ளப்பட்டு வருவது வருந்தத் தக்க விடையமே.