நியூசிலாந்து நாட்டில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுணாமி தோன்றும் அளவு ஆபத்தான நிலை ?

நியூசிலாந்து நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையை அந்நாட்டின் தேசிய அவசரநிலை மேலாண்மை ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு மேல் உள்ள குட்டி நாடான நியூசிலாந்து நாடு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் ஒன்று. இந்நிலையில், தற்போது நியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்து நாட்டின் வடக்குத் தீவு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், அந்நாடு முழுவதும் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆக்லாந்து நகருக்குக் கிழக்கே சுமார் 412 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3ஆகப் பதிவாகியுள்ளது. நியூசிலாந்தின் நில அதிர்வு நிறுவனம் இந்த பூகம்பத்தை “கடுமையானது” என்று குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து நியூசிலாந்து நாட்டிற்குச் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் அதிகாலையில் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் புகுந்தனர்.

இந்நிலையில் தற்போது சுனாமி எச்சரிக்கையை நியூசிலாந்தின் தேசிய அவசரநிலை மேலாண்மை ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. தற்போதைய நிலையில் கடலோர பகுதிகளில் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்றும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பலாம் என்றும் அந்நாட்டின் தேசிய அவசரநிலை மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.