கொழும்பில் கொலைசெய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட யுவதி குறித்து மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன

கொழும்பில் கொலைசெய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட யுவதி குறித்து மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரின் கொலையுடன் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும் புத்தல பொலிஸ் நிலையத்தின் சப் இன்ஸ்பெக்டரான முதியன்சலாகே பிரேமசிறி (52 வயது) என்பவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் மீட்கப்பட்டார். இந்த நிலையிலேயே ஒவ்வொன்றாக இதுகுறித்த தகவல்கள் கசிகின்றன.

இரத்தினபுரி குருவிட்ட பகுதியைச் சேர்ந்த பகுதியை சேர்ந்த திலினி யெயேன்ஷா ஜயசூரிய என்ற 30 வயதான குறித்த யுவதிக்கும், இந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்துள்ளது. குறித்த இன்ஸ்பெக்டர் இரத்தினபுரி எம்.பி. ஒருவரின் மெய்ப்பாதுகாவலராக பணிபுரிந்த சமயம் இந்த காதல் மலர்ந்துள்ளதுடன். கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். அதுமாத்திரமின்றி சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் ஒரே நேரத்தில் பலரைக் காதலித்து வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதேசமயம் கழுத்தறுத்து கொல்லப்பட்ட குருவிட்ட யுவதி கர்ப்பம் தரித்ததனால் இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருக்கலாமெனவும் இதன் காரணமாக இந்த கொலை அரங்கேறியிருக்கலாம் எனவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது. இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹங்வெல்ல பகுதிக்கு மேற்படி யுவதியுடன் விடுமுறையில் வந்த குறித்த இன்ஸ்பெக்டர் அங்கு அறை ஒன்றை எடுத்து தங்கியுள்ளதுடன் மறுநாள் காலை வரை இவர்கள் இருவரும் மூன்று தடவைகள் வெளியே சென்று வந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை காலை பத்து மணிக்கு பயணப்பெட்டியுடன் தனியொருவராக வெளியே வந்த இன்ஸ்பெக்டர் ஹோட்டலுக்குரிய கட்டணமான 4100 ரூபாவை செலுத்தி வெளியேறியுள்ளார்.

அதன்பின்னர் முச்சக்கரவண்டியில் பிரதான பஸ் நிலையத்திற்கு வந்து, கொழும்பு நோக்கிச் செல்லும் பஸ்ஸில் ஏறி பின்னர் குணசிங்கபுரவில் இறங்கி பயணப்பெட்டியை டாம் வீதியில் வைத்துவிட்டு தலைமறைவானார்.பொலிஸ் விசாரணைகளை திசைதிருப்பவே அவர் இந்த சடலத்தை டாம் வீதிக்கு கொண்டுவந்திருக்கக் கூடுமென்றும் ஆனால், சி.சி.ரி.வி. கெமராக்களிடம் சிக்கியதால் அவரால் தப்ப முடியாமல் போய்விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை டாம் வீதியில், யுவதியின் சடலத்தை அடையாளம் காண அவரின் சகோதரர் நேற்று வந்திருந்தார். இந்த காதல் குறித்து கேள்விப்பட்டு அதுகுறித்து தங்கையிடம் கேட்டதாகவும், அப்படியொன்றே நடக்கவில்லையென தங்கை தன்னிடம் கூறியதாகவும் அந்த சகோதரர் பொலிஸாரிடம் தெரிவித்தார். ஆனாலும் தனது தங்கை சிவனொளிபாதமலைக்கு செல்வதாக கூறியே வீட்டைவிட்டுப் புறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொலை செய்த இன்ஸ்பெக்டர் ஹோட்டல் உரிமையாளரை கடுமையாக மிரட்டியதுடன் சடலத்தை வைத்துவிட்டு செல்லும் காட்சிகள் தொலைக்காட்சி செய்திகளில் ஒளிபரப்பானதையடுத்து, ஹங்வெல்ல ஹோட்டலின் உரிமையாளரை மீண்டும் தொலைபேசியில் மிரட்டியுள்ளார். அதுமாத்திரமன்றி தன்னைப்பற்றிய தகவல் வெளியே வந்தால் ஹோட்டல் உரிமையாளரை கொலைசெய்துவிடுவதாகவும் எச்சரித்துள்ளார். இதனிடையே கொலை செய்தமையை இலகுவில் கண்டுபிடிக்கும் எந்த தகவலையும் குறித்த சப் இன்ஸ்பெக்டர் ஹோட்டலில் விட்டுவைக்கவில்லையென தெரிவித்த பொலிஸார் ஹங்வெல்லயில் கூரிய கத்தி ஒன்றையும், பயணப்பையையும் இன்ஸ்பெக்டர் வாங்கும் காட்சிகள் சி.சி.ரி.வி. கமராக்களில் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளனர்.

குறித்த யுவதியை அறையில் வைத்து கொலைசெய்துவிட்டு பின்னர் குளியறையில் வைத்தே அவரது கழுத்தை அறுத்துள்ளார்.கொழும்பு டாம் வீதியில் சடலமிருந்த பயணப்பையை வைக்கும்போது இவரது முதுகில் மற்றொரு பையும் இருந்துள்ளது. அந்த பையில்தான் யுவதியின் தலை இருந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அந்த பையை தேடும் பணிகள் தற்பொழுது படுவேகமாக இடம்பெற்றுவருகின்றன.இதேவேளை படல்கும்புர, வெஹெரகொட பகுதியிலுள்ள இறப்பர் தோட்டமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் அந்த சப் இன்ஸ்பெக்டரின் உடல் மீட்கப்பட்டது. தூக்கில் தொங்குவதற்கு முன்னர் நஞ்சருந்திய அவர், தனது நீளக் காற்சட்டையை பயன்படுத்தி சுருக்கிட்டுள்ளார். மேலும் அந்த இடத்தில் இருந்து நஞ்சு போத்தலொன்றும் மீட்கப்பட்டது.

ஆனால் அவர் தூக்கில் தொங்கிய விதம், மெல்லிய ஒரு மரத்தில் அவர் எவ்வாறு தொங்கினார் என்பதும் மிகவும் சந்தேகமாகவே உள்ளது.