ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய 4 இளைஞர்கள்: வடிவேலு காமெடி போல் நடந்த சம்பவம்!

ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய 4 இளைஞர்கள்: வடிவேலு காமெடி போல் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறிய சம்பவம்!

வடிவேலு நடித்த ஒரு படத்தில் கிணற்றை காணவில்லை என்று காவல்நிலையம் சென்று புகார் அளிப்பது போன்று ஒரு காமெடி காட்சி எடுக்கப்பட்டிருந்தது. யதார்த்தமாக எடுக்கப்பட்டிருந்த இந்த காட்சி பின்நாட்களில் உண்மையாகவே நடந்தது. இது போன்ற நில புகார்கள் தற்போதும் தொடர்ந்து செய்தியாக வந்துகொண்டிருக்கிறது. தற்போது ‘மருதமலை’ படத்தில் வடிவேலு நடித்த ஒரு நகைச்சுவைக் காட்சி உத்தரப்பிரதேசத்தில் உண்மையாகி இருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த பெண் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்த 4 இளைஞர்களுடன் ஊரை விட்டு தப்பி சென்றார். மீண்டும் அப்பெண்ணை கிராமத்திற்கு அழைத்து வந்த ஊர்க்காரர்கள் கிராம பஞ்சாயத்தை கூட்டி அந்த பெண் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்று குலுக்கல் முறையில் சீட்டு போட்டு தேர்வு செய்துள்ளனர். இது மருதமலை படத்தில் வரும் காவல் நிலைய காட்சியை அப்படியே கண் முன் கொண்டுவந்துள்ளது.

அஸிம்நகர் காவல்நிலைய சரகத்தைச் சேர்ந்த 4 இளைஞர்களும் அருகாமையில் உள்ள தண்டா காவல் நிலைய எல்லையைச் சேர்ந்த அந்தப் பெண்ணை காதலித்துள்ளனர். 4 பேரும் அந்த பெண்ணுடன் அவர்களின் கிராமத்திற்கு வந்து இரண்டு நாட்களுக்கு அப்பெண்ணை தெரிந்தவர் ஒருவரின் வீட்டில் அந்த 4 பேரும் தங்க வைத்துள்ளனர். இதற்கிடையே தங்கள் மகளை காணாததால் காவல்நிலையத்தில் புகார் அளிக்க அவரின் பெற்றோர்கள் முயற்சித்த போது இளைஞர்களின் கிராமத்தினர் அவர்களை தடுத்துள்ளனர்.

இதற்கிடையே கிராம மக்கள் அந்த 4 இளைஞர்களிடமும் தனித்தனியாக பேசி யாராவது ஒருவர் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 3 நாட்களாக இளைஞர்களிடம் பேசியும் யாரும் ஒருமித்த கருத்து ஒற்றுமைக்கு வராமல் இருந்துள்ளனர். மேலும் யாராவது ஒரு இளைஞரை தேர்வு செய்து திருமணம் செய்துகொள்ளுமாறு அப்பெண்ணிடம் ஊர்மக்கள் பேசிய போதும் அவரும் யாரையும் தேர்வு செய்யவில்லை,

இதனையடுத்து கிராம மக்கள் முன்னிலையில் பெண் எந்த இளைஞருடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சீட்டு குலுக்கி போட்டு முடிவு செய்து கொள்ளலாம் என பஞ்சாயத்தார் ஒரு முடிவுக்கு வந்தனர். இதற்கு அனைத்து தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதனையடுத்து 4 தாள்களில் 4 இளைஞர்களின் பெயரையும் எழுதி மடித்து ஒரு குவளையில் போட்டனர். பின்னர் அக்கிராமத்தில் இருந்த சிறுவன் ஒருவனை இதில் இருந்து சீட்டு எடுக்குமாறு அவர்கள் கூறியதன் பேரில் அதில் இரு இளைஞரை குலுக்கல் முறையில் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மருதமலை காவல்நிலைய நகைச்சுவை காட்சியை அப்படியே கண் முன் நிறுத்தியுள்ளது இந்த சம்பவம்.